ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல்


ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல்
x
தினத்தந்தி 9 April 2017 4:41 PM GMT (Updated: 9 April 2017 4:41 PM GMT)

நாடு முழுவதிலும் ஷரியத் மற்றும் முத்தலாக் முறைக்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.

நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன.  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார்.

பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார்.

அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர்.

குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

Next Story