புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளுடன் கைதானவர்கள் ‘ரூ.5 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்’


புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளுடன் கைதானவர்கள் ‘ரூ.5 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்’
x
தினத்தந்தி 9 April 2017 9:59 PM GMT (Updated: 2017-04-10T03:28:41+05:30)

மும்பை பாந்திரா, பேண்டு ஸ்டாண்டு பகுதியில் நேற்றுமுன்தினம் 3 பேர் ரூ.70 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளுடன் பிடிபட்டனர்.

மும்பை

மும்பை பாந்திராவில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் கைதானவர்கள் ஏற்கனவே ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பது தெரிவந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு

மும்பை பாந்திரா, பேண்டு ஸ்டாண்டு பகுதியில் நேற்றுமுன்தினம் 3 பேர் ரூ.70 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளுடன் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், நாலச்சோப்ராவில் உள்ள ஒரு வீட்டில் ரூ.2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கள்ளநோட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய கணினி, ஜெராக்ஸ் மெஷின் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ரூ.5 லட்சம் புழக்கத்தில்...

இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் ஏற்கனவே ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கைதான 3 பேரும் இரவு நேரங்களில் ஓட்டல், மதுபான விடுதி, பீர் பார்களில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை செலவழித்துள்ளனர். இதுவரை அவர்கள் ரூ.5 லட்சம் வரை கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கூறியுள்ளனர். மேலும் பிடிபட்டவர்கள் யார், யாருக்கெல்லாம் கள்ள நோட்டுகளை கொடுத்தார்கள், ரூ.70 லட்சம் கள்ள நோட்டுகளை யாரிடம் கொடுக்க வந்தார்கள் என்பது குறித்து அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.


Next Story