பால் தாக்கரே என் நெஞ்சில் குடியிருக்கிறார் நாராயண் ரானே பேச்சு


பால் தாக்கரே என் நெஞ்சில் குடியிருக்கிறார் நாராயண் ரானே பேச்சு
x
தினத்தந்தி 9 April 2017 10:06 PM GMT (Updated: 9 April 2017 10:06 PM GMT)

‘நான் எந்த கட்சியில் இருந்தாலும் பால் தாக்கரே என் நெஞ்சில் குடியிருக்கிறார்’ என தனது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் ரானே பேசினார்.

மும்பை,

‘நான் எந்த கட்சியில் இருந்தாலும் பால் தாக்கரே என் நெஞ்சில் குடியிருக்கிறார்’ என தனது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் ரானே பேசினார்.

பிறந்தநாள் விழா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயண் ரானேயின் 65–வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் இரவு மும்பை, பிரபாதேவியில் உள்ள நவீந்திரநாட்டிய அரங்கில் நடந்தது. இந்த விழாவில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்– மந்திரி சுசில்குமார் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நாராயண் ரானே பேசியதாவது:–

நெஞ்சில் குடியிருக்கிறார்

எனது வாழ்க்கையின் மிக முக்கிய வழிகாட்டி பால் தாக்கரே. இன்று இந்தநிலைக்கு நான் உயர்ந்துள்ளேன் என்றால் அதற்கு அவர் தான் முக்கிய காரணம். அவர் என் மீது அளவற்ற அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார். என்னைப்போல எந்த ஒருவர் மீதும் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. நான் எந்த கட்சியில் இருந்தாலும் பால்தாக்கரே என் நெஞ்சில் குடியிருக்கிறார். நான் மேயராக ஆசைப்பட்ட போது, அவர் எனக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். பால்தாக்கரேயின் ஆசி எனக்கு அதிகம் கிடைத்ததால் தான், இன்று மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு நான் தெரிந்தவனாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாராயண் ரானே சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் ஆவார். காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் அவர் பா.ஜனதாவில் இணைய போவதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story