அமர்மஹால் மேம்பாலம் திடீர் விரிசலால் மூடப்பட்டது


அமர்மஹால் மேம்பாலம் திடீர் விரிசலால்  மூடப்பட்டது
x
தினத்தந்தி 9 April 2017 10:10 PM GMT (Updated: 2017-04-10T03:40:33+05:30)

அமர்மஹால் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. மேம்பாலம் மூடப்பட்டதால் கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பை

அமர்மஹால் மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மேம்பாலம் மூடப்பட்டதால் கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மும்பை செம்பூர் அமர்மஹால் பகுதியில் கிழக்கு விரைவு சாலையில் முக்கிய மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் மும்பையில் இருந்து தானே நோக்கி வாகனங்கள் செல்லும் பகுதியில் நேற்று இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சீரமைப்பு பணிக்காக அந்த மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மும்பை நோக்கி வரும் மேம்பால பகுதியில் தானே நோக்கி செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

இரவு நேரத்தில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் மும்பையில் இருந்து தானே நோக்கி செல்லும். இந்தநிலையில் மேம்பாலம் மூடப்பட்டதால் கிழக்கு விரைவு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செம்பூரில் இருந்து சயான் வரை பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

வாகன ஓட்டிகள் அவதி

நேற்று காலையிலும் பாலத்தை சீரமைக்கும் பணி நடந்தது. இதனால் நேற்றும் கிழக்கு விரைவு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இது குறித்து அந்த வழியாக வழக்கமாக சென்று வரும் கார் டிரைவர் முகமது கூறும்போது, ‘வழக்கமாக 15 நிமிடங்களில் மாட்டுங்காவில் இருந்து தானேக்கு சென்று விடுவேன். இன்று 1 மணி நேரத்தை தாண்டிவிட்டது. இன்னும் செம்பூரை கூட கடக்க முடியவில்லை’ என்றார்.

சீரமைப்பு பணிகள் முடிந்து அமர்மஹால் மேம்பாலம் இன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story