ராம்நகரில் லேசான நிலநடுக்கம் கிராம மக்கள் பீதி


ராம்நகரில் லேசான நிலநடுக்கம் கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 9 April 2017 10:51 PM GMT (Updated: 2017-04-10T04:20:57+05:30)

சித்ரதுர்கா, துமகூரு, தாவணகெரேயை தொடர்ந்து ராமநகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பெங்களூரு,

சித்ரதுர்கா, துமகூரு, தாவணகெரேயை தொடர்ந்து ராமநகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

வீட்டு சுவர்களில் விரிசல்கள்

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகாவில் தொட்டனஹள்ளி கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கிராம மக்கள் தங்களின் வீடுகளில் தூங்கினர். அப்போது, திடீரென்று வீடுகள் குலுங்கின. மேலும், வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன.

இதனால், அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும், கிராமத்தில் உள்ள 5 பேரின் வீட்டு சுவர்களில் விரிசல்கள் விழுந்து இருந்தது தெரியவந்தது.

லேசான நிலநடுக்கம்

இதுகுறித்து நேற்று கிராம மக்கள் கூறுகையில், ‘நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவில் கிராமத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5 வினாடிகள் நீடித்தது. வீடுகள் குலுங்கியதில் பொருட்கள் உருண்டு விழுந்தன. வீட்டு சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பீதி அடைந்து உள்ளோம். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன்பின் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது‘ என்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டனஹள்ளி கிராமத்துக்கு சென்று அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா, இரியூர் தாலுக்காக்களில் உள்ள சில கிராமங்களிலும், துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியிலும், தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா காந்தி நகர் கிராமத்திலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், தொட்டனஹள்ளி கிராமத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story