தயாரிக்கும் நிறுவனங்களாலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது


தயாரிக்கும் நிறுவனங்களாலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது
x
தினத்தந்தி 9 April 2017 11:50 PM GMT (Updated: 9 April 2017 11:49 PM GMT)

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கூட அதில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் கமி‌ஷன் விளக்கம் அளித்து உள்ளது.

புதுடெல்லி

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கூட அதில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் கமி‌ஷன் விளக்கம் அளித்து உள்ளது.

தேர்தல் கமி‌ஷன் விளக்கம்

தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது சில அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போதுகூட வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி புகார் கூறியது. இதேபோல் பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் மின்னணு எந்திரத்தில் மோசடி செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. ஆனால் இதுபோன்ற புகார்களை தேர்தல் கமி‌ஷன் மறுத்து வருகிறது.

இப்போது இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் மேலும் சில விளக்கங்களை அளித்து இருக்கிறது. இதுகுறித்து தேர்தல் கமி‌ஷன் கூறி இருப்பதாவது:–

மோசடி செய்ய முடியாது

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மிகவும் பாதுகாப்பானது, நம்பகத்தன்மை கொண்டது. அதில் யாரும் முறைகேடு செய்ய முடியாது. மாதிரி–1 வகை வாக்குப்பதிவு எந்திரங்கள் 2006–ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்டன. அதன்பிறகு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மாதிரி–2 வகை வாக்குப்பதிவு எந்திரங்கள் 2006 முதல் 2012–ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்டன. பின்னர் அந்த எந்திரங்களை மேம்படுத்தி 2013–ம் ஆண்டுக்கு பிறகு மாதிரி–3 வகை எந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. யாராவது எந்திரத்தை திறந்து மோசடி செய்ய முயன்றால், அது தானாக தனது செயல்பாட்டை நிறுத்திவிடும்.

இந்த எந்திரங்கள் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்குவது இல்லை, மேலும் இணையதளத்துடனும் இணைக்கப்படுவது இல்லை. இதனால் ரிமோட் கண்ட்ரோல் மூலமோ அல்லது வேறு எந்த வழிகளிலோ இதில் மோசடி செய்ய முடியாது.

தயாரிக்கும் நிறுவனங்கள்

பெங்களூருவில் உள்ள பாரத் எலெக்டிரானிக்ஸ் நிறுவனமும், ஐதராபாத்தில் உள்ள இந்திய எலெக்டிரானிக்ஸ் கார்ப்பரே‌ஷன் நிறுவனமும் வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புகின்றன. எனவே தேர்தல் நடப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எந்த தேர்தலில், எந்த தொகுதியில், யார்–யார் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள்? என்பது அந்த நிறுவனங்களுக்கே தெரியாது. ஆகவே மின்னணு எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்களால் கூட அதில் மோசடி செய்ய முடியாது.

மேலும் ஒவ்வொரு எந்திரத்திலும் ஒரு வரிசை எண் உள்ளது. அதை வைத்தே தேர்தல் கமி‌ஷனின் சுவடு அறியும் மென்பொருள் எந்த எந்திரம் எங்கு உள்ளது என்பதை கண்டு அறிகிறது. எனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் மோசடி என்பதற்கு சாத்தியமே இல்லை.

செயல் இழந்துவிடும்

மின்னணு எந்திரங்களில் வெளிநாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இல்லை. பாரத் எலெக்டிரானிக்ஸ் நிறுவனமும், இந்திய எலெக்டிரானிக்ஸ் கார்ப்பரே‌ஷன் நிறுவனமும் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரிக்கின்றன. மின்னணு எந்திரங்களுக்கான மென்பொருளையும் இந்த நிறுவனங்களுக்குள்ளேதான் எழுதப்படுகின்றனவே தவிர, வெளியே இருந்து வாங்கப்படுவது இல்லை.

வாக்குப்பதிவு எந்திரத்தில் பயன்படுத்தப்படும் ‘மைக்ரோசிப்’பில் பிரத்யேக அடையாள எண்ணும், தயாரிப்பாளரின் அடையாளமும் உள்ளது. அந்த ‘மைக்ரோசிப்’பை மாற்ற முயற்சித்தாலோ அல்லது வேறு ஏதாவது மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய முயன்றாலோ மின்னணு எந்திரம் செயல் இழந்துவிடும்.

அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் கூட வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது இல்லையே? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அந்த நாடுகளில் வாக்குப்பதிவு எந்திரங்களை கம்ப்யூட்டருடன் இணைத்து பயன்படுத்தும் நெட்வொர்க் முறை என்பதால் அதில் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் அந்த நாடுகளில் இந்த வி‌ஷயத்தில் போதிய பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களும் இல்லை. எனவே அந்த நாடுகளின் கோர்ட்டுகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தடை விதித்து விட்டன.

இவ்வாறு தேர்தல் கமி‌ஷன் கூறி இருக்கிறது.


Next Story