ஸ்ரீநகர் தேர்தலில் கடும் வன்முறை, ஆனந்த்நாக் தேர்தலை ஒத்திவைக்க ஆளும் கட்சி கோரிக்கை


ஸ்ரீநகர் தேர்தலில் கடும் வன்முறை, ஆனந்த்நாக் தேர்தலை ஒத்திவைக்க ஆளும் கட்சி கோரிக்கை
x

ஆனந்த்நாக் பாராளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பிடிபி கோரிக்கை விடுத்து உள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பர்கான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இதை தடுக்க ஆளும் கட்சி (மக்கள் ஜனநாயக கட்சி) தவறியதாக கூறி ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதியின் எம்.பி. தாரிக் ஹமீது காரா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எனினும் அதையும் மீறி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இடைத்தேர்தலில் 7.14 சதவீத ஓட்டுகளே பதிவானது. 

வன்முறையாளர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில் ஆனந்த்நாக் பாராளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பிடிபி வலியுறுத்தி உள்ளது. 

காஷ்மீரின் ஆனந்த்நாக் தொகுதியின் எம்.பி.யாக இருந்த மெகபூபா முப்தி முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதன்கிழமை அங்கு இடைத்தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.   

இந்நிலையில் ஆனந்த்நாக் பாராளுமன்றத் தொகுதியில் ஆளும் கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள வேட்பாளர் தாசாதுக் முப்தி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முப்தி பேசுகையில், “தேர்தலை பின்னர் வரும் சாதகமான நாட்களில் நடத்திக் கொள்ளலாம், இப்போது ஒத்திவைப்போம் என கோரிக்கை விடுத்து உள்ளேன்,” என கூறிஉள்ளார். ஆனந்த்நாக் பாராளுமன்றத் தொகுதியானது குல்காம், புல்வாமா, சோபியான் மற்றும் ஆனந்த்நாக் பகுதிகளை உள்ளடக்கியது.

மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையானது இல்லை என்று மாநில அரசு தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து வருகிறது. தேர்தல் ஆணையம் உங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் போட்டியில் இருந்து விலகுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்து உள்ள முப்தி, பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்றால் நான் என்னுடைய வேட்பு மனுவை திரும்ப பெறுவேன் என்று கூறிஉள்ளார். 

Next Story