இந்தியருக்கு மரண தண்டனை: பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித்திற்கு சம்மன்


இந்தியருக்கு மரண தண்டனை: பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித்திற்கு சம்மன்
x
தினத்தந்தி 10 April 2017 12:10 PM GMT (Updated: 10 April 2017 12:10 PM GMT)

குல்பூஷன் யாதவிற்கு மரண தண்டனை விதித்த விவகாரத்தால் கடும் அதிருப்தி அடைந்துள்ள இந்தியா பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷன் யாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது. இவர் இந்திய உளவாளி எனவும், இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி  என்றும் பாகிஸ்தான் கூறியது. குல்பூஷன்யாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா,  ’ரா’ உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை  ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது. 

குல்பூஷன் யாதவிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

இந்த நிலையில், குல்பூஷன் யாதவிற்கு மரண தண்டனை விதித்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித்திற்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. குல்பூஷன் யாதவிற்கு எதிரான விசாரணை பற்றி பாகிஸ்தான் உரிய முறையில் இந்திய தூதரிடம் கூட தெரிவிக்கவில்லை எனவும், குல்பூஷன் யாதவிற்கு மரண தண்டனை விதித்தது திட்டமிட்ட படுகொலை எனவும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

Next Story