காங்., தி.மு.க. உள்பட 16 கட்சிகள் தேர்தல் கமி‌ஷனில் மனு


காங்., தி.மு.க. உள்பட 16 கட்சிகள் தேர்தல் கமி‌ஷனில் மனு
x
தினத்தந்தி 10 April 2017 10:00 PM GMT (Updated: 10 April 2017 8:36 PM GMT)

மின்னணு எந்திர ஓட்டுப்பதிவுக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்துமாறு காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 எதிர்க்கட்சிகள் தேர்தல் கமி‌ஷனில் மனு அளித்தன.

புதுடெல்லி,

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சந்தேகம் தெரிவித்தார். டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் அதிருப்தி தெரிவித்தார். இருவரும் பழையபடி ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாதிரி ஓட்டுப்பதிவின்போது, எல்லா வாக்குகளும் பா.ஜனதாவுக்கே விழுந்தன. இதனால், மின்னணு ஓட்டுப்பதிவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்தித்து ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தக்கோரி மனு அளித்தனர்.

நம்பிக்கை இழப்பு

குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா (இருவரும் காங்கிரஸ்), சதீஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ்), சவுகதா ராய் (திரிணாமுல் காங்கிரஸ்), மஜித் மேமன் (தேசியவாத காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.), ராஷ்டீரிய ஜனதாதளம், இடதுசாரி கட்சிகள் உள்பட 16 கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

பின்னர், அந்த தலைவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என எல்லோருமே எந்திர ஓட்டுப்பதிவில் நம்பிக்கை இழந்து விட்டனர். தேர்தல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. எனவே, ஜனநாயக நலனுக்காக, ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.

அனைத்து கட்சி கூட்டம்

எங்கள் கோரிக்கையை கேட்டுக்கொண்ட தேர்தல் கமி‌ஷன், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இதுபற்றி விவாதிப்பதாக உறுதி அளித்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story