மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 11 April 2017 12:00 AM GMT (Updated: 10 April 2017 9:06 PM GMT)

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா பாராளு மன்றத்தில் நிறைவேறியது.

புதுடெல்லி,

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சட்ட விதிமுறைகளில் பல மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. சில விதி
முறைகள் கடுமையாக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்குவது தொடர்பான பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகின்றன. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மசோதா தொடர்பாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட 20–க்கும் மேற்பட்ட திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பாராளுமன்ற நிலைக்குழு தெரிவித்த சில யோசனைகளும் மசோதாவில் சேர்க்கப்பட்டன.

அபராதம் அதிகரிப்பு

இந்த திருத்த மசோதா, மோட்டார் வாகன விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதம் விதிக்க வகை செய்கிறது.

அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாகவும், ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அவசர ஊர்திகளுக்கு (ஆம்புலன்ஸ் வாகனங்கள்) வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய அம்சமும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

காப்பீட்டு நிறுவனம், வாகன விபத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

இழப்பீட்டு தொகை

மசோதா மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சங்கர்பிரசாத் தத்தா, சாலை விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்த சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, இழப்பீட்டு தொகையை அதிகரித்தால் காப்பீட்டு பிரீமியம் தொகை மிகவும் அதிகரிக்கும் என்று கூறியதோடு, இழப்பீட்டு தொகையை வரம்பு இன்றி உயர்த்துவதற்கான அதிகாரம் நடுவர் மன்றத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். காப்பீட்டு நிறுவனம்தான் முழு இழப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டி இருப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து நடந்த ஓட்டெடுப்பில் அந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.

எம்.பி.க்கள் தலைமையில் கமிட்டிகள்

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அதிகாரம் கொண்ட கமிட்டிகள் எம்.பி.க்கள் தலைமையில் அமைக்கப்படும் என்றும், இந்த கமிட்டிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் இடம் பெறுவார்கள் என்றும், இந்த கமிட்டிகள் நெடுஞ்சாலை முதல் நகரசபை அளவில் உள்ள சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அதை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றும் நிதின் கட்காரி தனது பதில் உரையின் போது தெரிவித்தார்.

மேலும் இந்த திருத்த மசோதாவின்படி, வாகன சோதனை ஓட்டம் நடத்தாமல் இனி யாரும் ஓட்டுனர் உரிமம் பெற முடியாது என்று கூறிய அவர், சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெடுஞ்சாலைகளில் சிகிச்சை மையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

வாகனம் ஓட்டுபவர் மது அருந்தி இருந்தால் அந்த வாசனையை வைத்தே வாகனம் தானாக நின்றுவிடும் வகையிலான தொழில் நுட்பம் வந்து இருப்பதாகவும் நிதின் கட்காரி கூறினார்.

நிறைவேறியது

 ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நிபந்தனைகள் தொடர்பான திருத்தம் உள்பட பல திருத்தங்கனை உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். அந்த திருத்தங்களும் நிராகரிப்பட்டன. இது தொடர்பாக உறுப்பினர்கள் தெரிவித்த யோசனைகள் பின்னர் பரிசீலிக்கப்படும் என்று மந்திரி கட்காரி கூறினார்.

அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

Next Story