பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவ் கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு - ஆர்.கே. சிங்


பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவ் கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு - ஆர்.கே. சிங்
x
தினத்தந்தி 11 April 2017 12:11 PM GMT (Updated: 2017-04-11T17:40:37+05:30)

பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவ் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பிருக்கிறது என முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறிஉள்ளார்.

புதுடெல்லி,


பலுசிஸ்தானில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட இந்தியர் குல்பூஷன் ஜாதவை இந்திய உளவு அமைப்பான ‘ரா’–வுக்காக பணியாற்றியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அவருக்கு மரண தண்டனையை விதித்து உள்ளது. இவ்விவகாரத்தில் கடும் எதிர்விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என இந்தியா பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்து உள்ளது. குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்த பின்னர் இரு நாடுகள் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவ் மரணம் அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறிஉள்ளார். 

இந்நிலையில் முன்னாள் உள்துறை செயலாளரும், பா.ஜனதா எம்.பி.யுமான ஆர்.கே. சிங் பேசுகையில், “பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவ் துன்புறுத்தல்களால் உயிரிழந்திருக்க வேண்டும், பாகிஸ்தான் அதனை மறைக்கும் விதமாக மரண தண்டனை என்ற விசாரணை கதையை உருவாக்கி உள்ளது,” என கூறிஉள்ளார். அப்படி இல்லையென்றால் குல்பூஷன் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என கூறிஉள்ளார் ஆர்.கே. சிங்.  குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்தியா 13 முறை அனுமதி கோரி உள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷன் ஜாதவை சந்திக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் இதுவரையில் அனுமதிக்கவில்லை. எனவே குல்பூஷன் ஜாதவ் உயிருடன் இருக்க வாய்ப்பு கிடையாது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

 மேலும் ஒருமுறை குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்தியா உடனடியாக கோரிக்கையை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கூறிஉள்ளார். இப்போதைய நிலையில் நாங்கள் மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டோம் என பாகிஸ்தான் நாளையே அறிவித்தாலும் அறிவிக்கும் எனவும் அவர் எச்சரித்து உள்ளார். 


Next Story