கமி‌ஷனை அதிகரிக்காவிட்டால் ஞாயிறுதோறும் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது டீலர்கள் அறிவிப்பு


கமி‌ஷனை அதிகரிக்காவிட்டால் ஞாயிறுதோறும் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது டீலர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 April 2017 11:00 PM GMT (Updated: 11 April 2017 9:02 PM GMT)

கமி‌ஷன் தொகையை அதிகரிக்காவிட்டால், ஞாயிறு தோறும் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது; வார நாட்களிலும் பகல் நேரத்தில் மட்டுமே செயல்படுவோம் என பெட்ரோலிய டீலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் மீது பெட்ரோலிய நிறுவனங்கள் வழங்கி வருகிற கமி‌ஷனை கூட்டித்தர வேண்டும் என்று பெட்ரோலிய டீலர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்றித் தராததால் பெட்ரோலிய டீலர்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

இது குறித்து இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவி ஷிண்டே கூறியதாவது:–

1000 லிட்டர் பெட்ரோல் விற்பனைக்கு ரூ.2 ஆயிரத்து 570–ம், 1000 லிட்டர் டீசல் விற்பனைக்கு ரூ.1,620–ம் கமி‌ஷன் பெற்று வருகிறோம்.

ஆனால் 1000 லிட்டர் பெட்ரோல் விற்றால் ரூ.3 ஆயிரத்து 333–ம், 1000 லிட்டர் டீசல் விற்றால் ரூ.2 ஆயிரத்து 126–ம் கமி‌ஷன் வழங்க வேண்டும் என்று அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரை செய்து அறிக்கை அளித்துள்ளது.

ஞாயிறு இயங்காது

இந்த சிபாரிசை ஏற்று, கமி‌ஷன் தொகையை அதிகரித்து தர வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கேட்டு வருகிறோம்.

இதை நிறைவேற்றுவதாக எண்ணெய் நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி கூறின. ஆனால் அதன்படி நடந்து கொள்ளவில்லை.

இதில் மத்திய அரசு தலையிட வேண்டும். எங்களது கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்றித் தர வேண்டும்.

அவ்வாறு நிறைவேற்றித் தராவிட்டால், முதலில் மே மாதம் 10–ந் தேதியன்று பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்யாமல், ‘கொள்முதல் இல்லா நாள்’ கடைப்பிடிப்போம்.

அடுத்து மே மாதம் 14–ந் தேதி தொடங்கி ஞாயிறுதோறும் பெட்ரோல் நிலையங்களை இயக்க மாட்டோம்.

மே மாதம் 15–ந் தேதி முதல் பெட்ரோல் நிலையங்களை பகலில் மட்டுமே (காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை) செயல்படச்செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story