பெரா விதிமுறைகளை மீறிய வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்ட்


பெரா விதிமுறைகளை மீறிய வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக  மீண்டும் பிடிவாரண்ட்
x
தினத்தந்தி 12 April 2017 7:59 AM GMT (Updated: 12 April 2017 7:59 AM GMT)

பெரா விதிமுறைகளை மீறிய வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய பிடிவாரண்ட்டை டெல்லி மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் பிறப்பித்தது.

புதுடெல்லி,

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பெற்ற மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை. அவற்றில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் பெற்ற ரூ.900 கோடி கடனும் அடங்கும். இதுதொடர்பாக, விஜய் மல்லையா மற்றும் அவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. பின்னர், மற்ற வங்கிகளை அவர் ஏமாற்றியது தொடர்பாகவும் விசாரணையை விரிவுபடுத்தியது.இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே, கடந்த மார்ச் 2-ந் தேதி, விஜய் மல்லையா, லண்டனுக்கு சென்று விட்டார். அதன்பிறகு அவர் நாடு திரும்பவில்லை.

அவரை நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் கோரிக்கை விடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவில் அவர் மீதுள்ள வழக்கு விசாரணைகளில் விஜய் மல்லையாவுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளன. இந்த நிலையில், பெரா மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக மேலும் ஒரு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி டெல்லி மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால், இந்த பிடிவாரண்ட் இன்னும் செயல்படுத்த முடியாத காரணத்தால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து இது போன்ற கால நிர்ணையம் இல்லாத பிடிவாரண்ட்டிற்கு குறிப்பிட்ட காலக்கெடு கிடையாது என கூறிய நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் நவம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், வழக்கின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story