வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை படுகொலை செய்ய கூடாது ஐகோர்ட்டு கண்டிப்பு


வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை படுகொலை செய்ய கூடாது ஐகோர்ட்டு கண்டிப்பு
x
தினத்தந்தி 12 April 2017 3:38 PM GMT (Updated: 2017-04-12T21:08:04+05:30)

‘‘வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை படுகொலை செய்ய கூடாது’’ என்று மும்பை ஐகோர்ட்டு கண்டிப்புடன் கூறிஉள்ளது.


மும்பை, 

மும்பையில் சீப்ஸ்– கொலபா இடையே மெட்ரோ ரெயில் திட்டத்தின் 3–ம் கட்ட பணியை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சர்ச்கேட் மற்றும் கப்பரடே இடையே உள்ள 5 ஆயிரம் மரங்களை வெட்ட மும்பை மெட்ரோ ரெயில் கழகம் முடிவு செய்தது. இதையொட்டி, கப்பரடேயில் உள்ள சிறுவர் பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்டதாக கூறி உள்ளூர் பொதுமக்கள், மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது  மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘கப்பரடேயில் உள்ள சிறுவர் பூங்காவை சேதப்படுத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தடை விதித்த போதிலும், அதனை மும்பை மெட்ரோ ரெயில் கழகம் மீறிவிட்டது’’ என்று வாதிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மெட்ரோ ரெயில் கழக வக்கீல், ‘‘மெட்ரோ ரெயில் திட்டத்தையொட்டி, குறிப்பிட்ட சிறுவர் பூங்காவில் எந்தவொரு வளர்ச்சி பணியும் தொடங்கவில்லை. அதற்கு சேதம் ஏற்படுத்தவும் இல்லை’’ என்று குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘‘வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை படுகொலை செய்ய கூடாது’’ என்று கண்டித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வெறுமனே பிரமாணப்பத்திரம் மட்டும் தாக்கல் செய்தால் போதாது என்று கூறிய அவர்கள், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருகிற 24–ந் தேதியன்று தாக்கல் செய்யுமாறு மெட்ரோ ரெயில் கழகத்துக்கு உத்தரவிட்டனர். முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட உத்தரவுகள் வரும் வரையில் மரங்களை வெட்ட கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Next Story