உலகிலேயே குண்டு பெண்ணாக இருந்த எமான் அகமதுவின் உடல் எடை பாதியாக குறைந்தது


உலகிலேயே குண்டு பெண்ணாக இருந்த எமான் அகமதுவின் உடல் எடை பாதியாக குறைந்தது
x
தினத்தந்தி 12 April 2017 3:45 PM GMT (Updated: 2017-04-12T21:14:52+05:30)

மும்பையில் சிகிச்சை பெற்று வரும் உலகிலேயே குண்டு பெண்ணாக இருந்த எகிப்து நாட்டு 500 கிலோ குண்டு பெண் எமான் அகமதுவின் உடல் எடை பாதியாக குறைந்தது.


மும்பை,


எமான் அகமதுவின் உடல் எடை பாதியாக குறைந்ததாகவும், சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது 36). இவருக்கு 11 வயது ஆனபோது பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் அவர் மிகவும் குண்டானார்.

படுக்கையிலேயே சுமார் 25 ஆண்டுகள் கழிந்தநிலையில், தற்போது எமான் 500 கிலோ எடையுடன் உள்ளார். இவர் உலகிலேயே மிகவும் குண்டான பெண்ணாகவும் கருதப்பட்டார். எமான் தனக்கு உடல் பருமனை குறைக்க தேவையான சிகிச்சை அளிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த டாக்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் யாரும் முன்வரவில்லை. அவருக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால் உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை இலவசமாக செய்ய முன்வந்தார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜிடம், எமானுக்கு மருத்துவ விசா வழங்குமாறு டாக்டர் முப்பஷால் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதன்மூலம் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து எமான் பிப்ரவரி 11-ம் தேதி காலை மும்பை அழைத்துவரப்பட்டார். இதற்காக விமானத்தில் சிறப்பு படுக்கை தயாரிக்கப்பட்டு இருந்தது. முன்எச்சரிக்கையாக அனைத்து அவசரகால மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களும் விமானத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. மும்பை விமான நிலையம் வந்தடைந்த எமான் அவசரகால மருத்துவ வசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருந்த லாரியில் ஏற்றப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு காலை 6 மணிக்கு கொண்டுவரப்பட்டார்.

 பின்னர், அவர் லாரியில் இருந்து கிரேன் மூலம் ஆஸ்பத்திரியில் அவருக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக அறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆஸ்பத்திரியில் எமானுக்கு 3 மாதங்கள் உடல் எடை குறைப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அவருக்கு உடல் எடை குறைப்பிற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது எமான் அகமதுவிற்கு அளித்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. தற்போது எமான் அகமதுவின் உடல் எடை 242 கிலோவாக குறைந்து உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் முப்பாஷால் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ‘எமானுக்கு அளித்து வந்த லேப்ரோஸ்கோபிக் சிகிச்சையில் அவரது வயிற்று பகுதியில் தேங்கி இருந்த கொழுப்பு, கரைசலாக மாற்றி வெளியேற்றப்பட்டது. கடந்த மாதம் 29–ந்தேதி 340 கிலோ எடை இருந்தார். தற்போது அவர் 242 கிலோ எடை உள்ளார். நல்ல முன்னேற்றம் இருந்து வரும் நிலையில் அவருக்கு தொடர்ந்து எடை குறைப்பிற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே வேளையில் அவரின் சிறுநீரகம், இருதயம், நுரையீரல், போன்ற உறுப்புகளும் நன்றாக செயல்படுகிறதா? என்பதையும் நாங்கள் கவனமுடன் பார்த்து வருகிறோம்’ என்றார். 


Next Story