தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு - முதல்வர் அறிவிப்பு


தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு - முதல்வர் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 April 2017 9:38 PM GMT (Updated: 12 April 2017 9:38 PM GMT)

தங்கள் மாநிலத்திலுள்ள இஸ்லாமிய சமூகத்திற்குள் அடங்கும் பிற்படுத்தப்பட்டவர், மலையக ஜாதியினரின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

ஹைதராபாத்

தங்கள் மாநிலத்திலுள்ள இஸ்லாமிய சமூகத்திற்குள் அடங்கும் பிற்படுத்தப்பட்டவர், மலையக ஜாதியினரின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ஏப்ரல் 16 ஆம் தேதியன்று சட்டப்பேரவையை கூட்டி சட்ட முன் வரைவை (மசோதா) நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் சந்திரசேகர ராவ், எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீட்டை உயர்துவது என்பதை ஏப்ரல் 15 அன்று மந்திரிசபையைக் கூட்டி முடிவு செய்யப்போவதாக தெரிவித்தார்.

இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெலுங்கானா அரசு கூறியுள்ளது. மேலும் பிற்பட்டோர் நல ஆணையத்தின் அறிக்கை மற்றும் இரண்டு மலையக மக்கள், சிறுபான்மையினர் மீதான ஆய்வறிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

இம்மசோதாவை பாஜக எதிர்ப்பதைப் பற்றி கேட்டப்போது நாங்கள் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அளிக்கப்போவதில்லை என்றார், மேலும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெற தமிழகத்தின் வழிமுறையைப் பின்பற்றப்போவதாகவும் தெரிவித்தார். இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது எனும் வரையறையை தமிழகம் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து தனது இட ஒதுக்கீட்டை காத்தது போல இம்முறையும் நாங்கள் மத்திய அரசை செய்யச் சொல்லப்போகிறோம், என்றார் சந்திரசேகர ராவ். அதை மத்திய அரசு செய்யாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகி மத்திய அரசிற்கு உத்தரவிடக் கோரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். பிற்பட்ட சமூகத்தினர் மக்கள் தொகையில் கணிசமாக இருப்பதால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் வரும் மாதங்களில் உயர்த்தப்போவதாக ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானாவின் மக்கள் தொகையில் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலையகத்தினர் மற்றும் இஸ்லாமியர் ஆகியோர் 90 சதவீதம் அளவிற்கு இருப்பதால் இட ஒதுக்கீடுகளை அதிகரிக்கப் போவதாக முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலுக்குள் கொண்டு வரக்கூடிய இது போன்ற இட ஒதுக்கீடுகளை தங்களது கட்சி ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. இதற்காக மக்கள் இயக்கத்தையும் நடத்தவுள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.


Next Story