ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவதால் போலி பான் கார்டுகளை ஒழிக்க முடியும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்


ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவதால் போலி பான் கார்டுகளை ஒழிக்க முடியும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
x
தினத்தந்தி 2 May 2017 11:15 PM GMT (Updated: 2017-05-03T03:02:23+05:30)

ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவதன் மூலம் போலி பான் கார்டுகளை ஒழிக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் அளித்து உள்ளது.

புதுடெல்லி,

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. இதே போல் பான் கார்டு வாங்க ஆதார் அட்டை அவசியம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இந்திய குடிமகன்கள் யாரையும் ஆதார் எண்ணை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுவது ஆதார் சட்ட நடைமுறைக்கு முரணானது. குறிப்பாக ஒழுங்காக வரி செலுத்துபவர்களிடம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்க நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

மத்திய அரசு பதில்

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பான் கார்டு வாங்க ஆதார் அட்டை அவசியம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு சட்ட நிபுணர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறியதாவது:–

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில், சுயபரிசோதனை முயற்சி என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

போலிகள் நீக்கம்

ஆதார் நடைமுறை நம்பகமானது, வலிமையானது. ஆதார் அட்டையை போலியாக தயாரிக்க முடியாது. எனவே ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவதன் மூலம் போலி பான் கார்டுகளை நாடு முழுவதும் ஒழிக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

இதுவரை 113.7 கோடி ஆதார் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. ஆதார் எண் கட்டாயத்தால் 10 லட்சம் போலி பான் கார்டுகளை கண்டறிந்து மத்திய அரசு நீக்கி உள்ளது. மேலும் ஆதார் மூலமாக ஏழை மக்களின் நலத்திட்டங்கள், முதியோர் ஓய்வூதிய திட்டங்கள் முறையான நபர்களுக்கு சென்றடைந்து இருக்கிறது. இதனால் மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி உள்ளது.

கருப்பு பணம்

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி, கருப்பு பணப்புழக்கம் ஆகியவற்றை தடுப்பதில் ஆதார் அட்டை மூலக்காரணமாக உள்ளது. போலி பான் கார்டுகளால் தவறான வழியில் நிதி பயன்படுத்தப்படுகிறது. இது தற்போது தடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது.


Next Story