உத்தரவிட்ட பிறகும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி


உத்தரவிட்ட பிறகும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
x
தினத்தந்தி 3 May 2017 6:05 AM GMT (Updated: 3 May 2017 6:05 AM GMT)

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி

தமிழக அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் காமராஜ். அமைச்சர் காமராஜ் மீது ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமார் என்பவர் மோசடி புகார் கொடுத்திருந்தார். இவரது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் அகற்றி தருவதாக அமைச்சர் காமராஜ் ரூ.30 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த பண மோசடி தொடர்பாக குமார் அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் கோர்ட்டு உதவியை நாடினார்.

இதுதொடர்பாக அவர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அமைச்சர் ரூ.30 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாகவும், தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாகவும் குமார் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 28 ந்தேதி உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னரும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? புகார் தெரிவித்த பினனர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு மேலானவரா என கேள்வி எழுப்பியது. கோர்ட், வழக்கு தொடர்பான ஆவணங்களை வரும் 8 ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது.தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்ந்தவர் மோசடி புகாரில் சிக்கியவர் எனக்கூறினார். 

Next Story