ராணுவ வீரர்கள் உடலை சிதைத்தது பாகிஸ்தான் ராணுவம்தான் என்பதற்கு போதுமான ஆதாரம் உள்ளது - இந்தியா


ராணுவ வீரர்கள் உடலை சிதைத்தது பாகிஸ்தான் ராணுவம்தான் என்பதற்கு போதுமான ஆதாரம் உள்ளது - இந்தியா
x
தினத்தந்தி 3 May 2017 11:24 AM GMT (Updated: 3 May 2017 11:24 AM GMT)

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் உடலை சிதைத்தது பாகிஸ்தான் ராணுவம்தான் என்பதற்கு போதுமான ஆதாரம் உள்ளது என இந்தியா தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,

காஷ்மீரில் 2 இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவம் துண்டித்து உடலை சிதைத்தது மிகவும் கொடூரமான செயல் என்று இந்தியா வன்மையாக கண்டித்து உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று இந்திய ராணுவமும் அறிவித்து உள்ளது. ஆனால் எப்போதும் நாங்கள் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், ‘‘காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் துண்டித்தது என்று கூறுகிறீர்கள். 

இந்தியாவுக்குள் நுழைந்து பாகிஸ்தான் சிறப்பு அதிரடி படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க தகுந்த ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் கொடுங்கள்’’ என்றது. இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை அழைத்து இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

இந்நிலையில் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களுடைய உடலை சிதைத்தது பாகிஸ்தான் ராணுவம்தான் என்பதற்கு போதுமான ஆதாரம் உள்ளது என இந்தியா தெரிவித்து உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே பேசுகையில், “கிரிஷ்ணா காதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்தது என்பதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு காரணமான ராணுவ அதிகாரிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாங்கள் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டு உள்ளோம்,” என கூறிஉள்ளார். 

இவ்விவகாரத்தில் இந்தியாவில் உள்ள கோபத்தினை பாகிஸ்தான் நாட்டு தூதர் அந்நாட்டிடம் எடுத்துரைப்பார் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story