ராம்கங்கை ஆற்றில் எலெக்ட்ரானிக் கழிவுகள் கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை


ராம்கங்கை ஆற்றில் எலெக்ட்ரானிக் கழிவுகள் கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 May 2017 12:05 PM GMT (Updated: 2017-05-03T17:35:34+05:30)

உத்தர பிரதேசத்தில் ராம்கங்கை ஆற்றில் எலெக்ட்ரானிக் கழிவுகளை கொட்டினால் சுற்று சூழலுக்கான இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் மொரதாபாத் நகரில் கங்கை ஆற்றின் கிளையான ராம்கங்கை ஆறு அமைந்துள்ளது.  இந்நிலையில், இந்த ஆற்றில் பெருமளவிலான எலெக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள் கொட்டப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூட்டாய்வு செய்தது.

இதில், சர்க்கரை ஆலைகள், டிஸ்டிலெரி கம்பெனிகள், காகிதம், துணி மற்றும் சாய தொழிற்சாலைகள் போன்றவற்றில் இருந்து அதிக அளவில் கழிவுகள் வெளியேறி இதில் கலக்கிறது என்பது தெரிய வந்தது.  இதனால் பெருமளவில் ஆற்றின் தூய்மை சீர்கெடுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.

இந்த தகவலை கருத்தில் கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது.  அதன்பின் அதன் தலைவரான நீதிபதி ஸ்வதேந்தர் குமார் தலைமையில்ன அமர்வு இதற்காக தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது.

ஆற்றில் உள்ள கழிவுகளை உடனடியாக நீக்கும் பணியை இந்த குழு மேற்கொள்ளும்.  அது பற்றிய விரிவான அறிக்கையை 2 வாரங்களில் தீர்ப்பாயத்திற்கு சமர்ப்பிக்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய ஆபத்து நிறைந்த கழிவுகள் அதிகம் கலப்பதுடன் அவற்றில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சுற்று சூழல் சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலான உலோக பொருட்களும் கலந்துள்ளன.

இவற்றை நீக்குவதற்கான பொறுப்பை ஏற்பதில் இருந்து அனைத்து அதிகாரிகளும் விலகி கொள்கின்றனர்.  அதனுடன் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று கூறிய தீர்ப்பாயம், இனி இதுபோன்ற ஒவ்வொரு சம்பவத்திலும் சுற்று சூழல் இழப்பீடாக ரூ.1 லட்சத்தினை அனைத்து தொழிற்சாலைகளும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

ஆற்றில் சேரும் கழிவுகளுக்கு ஏற்ப ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வேறுபடும் என்பதனையும் நீதிபதி அமர்வு தெளிவுப்படுத்தியுள்ளது.

Next Story