பசுவதை செய்தால் ரூ. 2.51 லட்சம் அபராதம் உ.பி. இஸ்லாமிய கிராமம் உத்தரவு


பசுவதை செய்தால் ரூ. 2.51 லட்சம் அபராதம் உ.பி. இஸ்லாமிய கிராமம் உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2017 6:32 AM GMT (Updated: 2017-05-04T12:02:24+05:30)

உத்தபிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கிராமம் பசுவதை செய்தால் ரூ. 2.51 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டு உள்ளது.

லக்னோ,

மதுரா மாவட்டத்தில் உள்ள மாதோரா கிராம பஞ்சாயத்து யாராவது இறைச்சிக்காக பசுவை வெட்டினால் அவர்களுக்கு ரூ. 2.51 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டு உள்ளது. கிராம தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தபோது பஞ்சாயத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 3000 பேர் வசிக்கும் கிராமத்தில் இஸ்லாமிய மக்களே அதிகமாக வாழ்கின்றனர். பஞ்சாயத்து கூட்டத்தின் போது, பசுவதைக்கு எதிரான உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.  

 “பசுவதையில் ஈடுபடுவோர் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 51 ஆயிரம் பரிசு வழங்கப்படும்,” என முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கிராமத்தின் முன்னாள் தலைவர் முகமத் ஹப்பார் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
 
கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு ரூ. 1.11 லட்சமும், மது குடிப்பவர்களுக்கு ரூ. 31 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் கிராம பஞ்சாயத்து அறிவித்து உள்ளது. யாராவது சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று வசூலிக்கப்படும் பணமானது கிராமத்தின் சமூதாய பணிக்காக பயன்படுத்தப்படும் எனவும் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் வீட்டுக்கு வெளியே பொது இடங்களில் பெண்கள் செல்போன் பேச தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதை மீறினால் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடத்தல் போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கவே இந்த தடை விதிக்கப்பட்டதாக பஞ்சாயத்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெண்களின் நவீன பழக்க வழக்கங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தடை, அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

Next Story