போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது


போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது
x
தினத்தந்தி 5 May 2017 4:13 AM GMT (Updated: 5 May 2017 4:12 AM GMT)

போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவரை போலீசார் கைது செய்தனர். இவர் பணம் எடுக்க வங்கிக்கு வந்த போது சிக்கினார்.

மும்பை, 

மும்பை கப்பரேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் அரசு துறையான பழங்குடியின வளர்ச்சி நிறுவனம் என்ற பெயரில் வங்கி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு இருந்தது. அண்மையில் இந்த வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இது பற்றி அறிந்த வங்கி மேலாளர் இந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது? மேலும் யார் அனுப்பியது என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார். அப்போது வங்கியில் டெபாசிட் ஆன பணம் நாசிக்கில் இருந்து அனுப்பப்பட்டது என்பதும், போலி சான்றிதழ் மூலம் அரசுக்கு சொந்தமான பழங்குடி வளர்ச்சி நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி சார்பில் மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சான்றிதழ் மூலம் அரசு துறை பெயரில் வங்கி கணக்கு தொடங்கியவரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வங்கிக்கு பணம் எடுக்க வந்த அந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பாந்திராவை சேர்ந்த பிரவீன் சிங்க்வன் (வயது 21) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக அரசு துறை பெயரில் கணக்கு தொடங்கினார்? அதில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் எப்படி வந்தது? என்பது குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story