நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்


நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு  விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 5 May 2017 9:00 AM GMT (Updated: 2017-05-05T14:29:52+05:30)

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார். 6 பேர் சேர்ந்த கும்பல் அந்த மாணவியை ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்தது. இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. 

இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமான அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 4 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. மிகவும் அரிதான வழக்கு என்பதால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது, குற்றவாளிகளுக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story