சசிகலா புஷ்பா எம்.பி.க்கு போலீஸ் பாதுகாப்பு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


சசிகலா புஷ்பா எம்.பி.க்கு போலீஸ் பாதுகாப்பு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 May 2017 9:00 PM GMT (Updated: 5 May 2017 7:51 PM GMT)

சசிகலா புஷ்பா எம்.பி.க்கு 24 மணி நேரமும் முழு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

சசிகலா புஷ்பா எம்.பி.க்கு 24 மணி நேரமும் முழு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டில் மனு

அ.தி.மு.க. தலைமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும், எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டெல்லி மேல்–சபையில் கடந்த ஆண்டு கூறினார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டதுடன், அவரது பாதுகாப்புக்கு ஒரு காவலரும் நியமிக்கப்பட்டார்.

பின்னர் சசிகலா புஷ்பா எம்.பி. டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு டெல்லி போலீஸ் கமி‌ஷனர், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசுதோஷ் குமார், ‘சசிகலா புஷ்பா எம்.பி.க்கு வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என நேற்று உத்தரவிட்டார். சசிகலா புஷ்பா எம்.பி., நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அவருக்கு முழு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் அந்தந்த மாநிலத்தின் போலீஸ் காவல் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டார்.


Next Story