விமானத்தில் தகராறு செய்தால் வாழ்நாள் தடை


விமானத்தில் தகராறு செய்தால் வாழ்நாள் தடை
x
தினத்தந்தி 5 May 2017 10:00 PM GMT (Updated: 2017-05-06T01:30:04+05:30)

விமானத்தில் தகராறு செய்தால் வாழ்நாள் வரை தடை விதிப்பதற்கான தடை புதிய வரைவு விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது.

புதுடெல்லி,

விமானத்தில் தகராறு செய்யும் பயணிகள், விமானத்தில் பயணம் செய்ய 3 மாதங்கள் முதல் வாழ்நாள்வரை தடை விதிப்பதற்கான புதிய வரைவு விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது.

சிவசேனா எம்.பி.க்கு தடை

சிவசேனா கட்சி எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு ‘பிசினஸ் வகுப்பு’ இருக்கை ஒதுக்காததற்காக, ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியரை 25 தடவை செருப்பால் அடித்தார். அதனால், அவர் விமானத்தில் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், விமானத்தில் தகராறு செய்யும் பயணிகள் விமானத்தில் பறக்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, இதுதொடர்பான புதிய வரைவு விதிமுறைகளை மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜு நேற்று டெல்லியில் வெளியிட்டார்.

3 வகை தகராறுகள்

அதன்படி, 3 வகையான தகராறுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1. பயணத்தை சீர்குலைக்கும் வகையிலான நடத்தை. 2. உடல்ரீதியாக துன்புறுத்தும் நடத்தை. 3. உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நடத்தை.

முதலாவது நடத்தையில், சைகை காட்டுதல், வசை பாடுதல், குடிபோதையில் ஒழுங்கீனமாக நடத்தல் ஆகியவை அடங்கும். இவற்றுக்கு 3 மாதங்கள்வரை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும்.

இரண்டாவது நடத்தையில், தள்ளுதல், உதைத்தல், அடித்தல், பிடித்து இழுத்தல், முறைகேடாக தொடுதல், பாலியல் துன்புறுத்தல் ஆகியவை அடங்கும். இவற்றுக்கு 6 மாதங்கள்வரை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும்.

மூன்றாவது நடத்தையில், விமானத்தின் இயக்க சாதனங்களுக்கு சேதம் விளைவித்தல், வன்முறையில் ஈடுபடுதல், கொலைவெறியுடன் தாக்குவது, விமானிகள் அறையில் அத்துமீறி நுழைதல் ஆகியவை அடங்கும். இவற்றுக்கு 2 ஆண்டுகள் அல்லது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும். ஆபத்தானவர்களாக, பாதுகாப்பு அமைப்புகளால் அடையாளம் காணப்படுபவர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவர்.

விசாரணை குழு

மேற்கண்ட புகார்களுக்கு உள்ளான பயணிகள் பற்றி விசாரணை நடத்த 3 பேர் கொண்ட நிலைக்குழுவை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அமைக்கும். அதில், (ஓய்வு பெற்ற) மாவட்ட நீதிபதி, வேறு ஒரு விமான நிறுவனத்தின் பிரதிநிதி, பயணிகள் சங்கத்தின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுவார்கள். இக்குழு 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்கும். அதுவரை, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில், அந்த பயணி பறக்க முடியாது.

இந்த நிலைக்குழு, பறப்பதற்கு தடை விதித்தால், அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட பயணி மேல்முறையீடு செய்யலாம். அதற்காக, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான மேல்முறையீட்டு குழுவை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அமைக்கும். ஆனால், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக தடை விதிக்கப்பட்ட பயணிகள் மட்டும் மேல்முறையீட்டுக்கு செல்ல முடியாது.

ஒரு பயணி, ஒரு தவறை மறுபடியும் செய்தால், அவருக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட காலஅளவைப் போல், 2 மடங்கு தடை விதிக்கப்படும்.

தடை பட்டியல்

விமானங்களில் பறக்க தடை விதிக்கப்படும் பயணிகள் அடங்கிய தேசிய பட்டியலை தயாரிக்கவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஒரு விமான நிறுவனம் தடை செய்த பயணியை வேறு விமான நிறுவனமும் அதே காலகட்டத்தில் தடை செய்யலாம்.

இது, உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும், எல்லா விமான நிறுவனங்களும் இந்த தடையை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. சர்வதேச விமான நிறுவனங்கள் இதை பின்பற்றுவது, அவற்றின் விருப்பத்தை பொறுத்தது ஆகும்.

தடை விதிக்கப்பட்ட ஒரு பயணி, அதை மீறி பயணம் செய்வதை தடுக்க, அவரது ஆதார் எண் அல்லது பாஸ்போர்ட் அடிப்படையில் அவரை அடையாளம் கண்டறிந்து தடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கருத்து கேட்பு

இவை அனைத்தும் வரைவு விதிமுறைகள்தான். இவை இணையதளத்தில் வெளியிடப்படும். பயணிகள் தங்கள் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். அவற்றின் அடிப்படையில், சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளில் இறுதி திருத்தங்களை ஜூன் 30–ந்தேதிக்குள் மத்திய அரசு கொண்டு வரும்.

இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி ஜெயந்த் சின்கா கூறுகையில், ‘பயணிகள் பாதுகாப்பு என்ற அடிப்படையில், உலகில் எந்த நாட்டிலும், ‘தடை விதிக்கப்பட்ட பயணிகள் பட்டியல்’ கிடையாது. இந்த வி‌ஷயத்தில் உலகத்துக்கே இந்தியா வழி காட்டுகிறது’ என்றார்.


Next Story