எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த தமிழக மாணவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்


எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த தமிழக மாணவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 6 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-07T01:17:28+05:30)

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த தமிழக மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய டெல்லி போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.

புதுடெல்லி,

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த தமிழக மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய டெல்லி போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். இது தொடர்பாக அவரது தந்தையை டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

கொலை வழக்காக பதிவு

திருப்பூர் அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சரவணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். டெல்லி கவுதம் நகரில் தங்கியிருந்த இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10–ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வி‌ஷ ஊசி மூலம் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

எனவே சரவணனின் சாவை டெல்லி போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். ஆனால் அவரது சாவில் சந்தேகம் கொண்ட அவருடைய தந்தை கணேசன், இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

தந்தைக்கு அழைப்பு

அதன் அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்த டெல்லி போலீசார், விசாரணையை தொடங்கினர். இதில் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் அவர்கள், சரவணன் ஏற்கனவே படித்த மதுரை மருத்துவக்கல்லூரிக்கும் சென்று ரகசியமாக விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், சரவணனின் தந்தை கணேசனை நேற்று விசாரணைக்காக டெல்லிக்கு போலீசார் அழைத்திருந்தனர். அதன்பேரில் கணேசன் நேற்று பகல் 2.30 மணிக்கு மாளவியாநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவருடன் அவருடைய வக்கீல் கிருஷ்ணராஜும் வந்தார். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் மதன்லால் மீனா விசாரணை நடத்தினார். இந்த விசாரணை மாலை 6.30 மணிவரை நடந்தது.

விரைவில் சிக்குவார்கள்

விசாரணையில், சரவணனின் பழக்க வழக்கங்கள் பற்றியும், அவருடைய நெருங்கிய நண்பர்கள் பற்றியும் போலீசார் கேட்டதாக தெரிகிறது. மேலும் சந்தேகப்படும் எதிரிகள் யாரேனும் உண்டா? என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

இதுபற்றி கணேசன் பின்னர் கூறுகையில், ‘என் மகனைப்பற்றி பல விவரங்களை போலீசார் என்னிடம் கேட்டனர். ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அவர்கள் பல இடங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே நாங்களும் தனியாக விசாரணை நடத்தினோம். டெல்லி போலீசார் எங்களிடம் தெரிவித்த விவரங்கள், நாங்கள் சேகரித்த விவரங்களோடு ஒத்துப்போகிறது. எனவே விசாரணை சரியான பாதையில் செல்வதாக கருதுகிறேன். இதன்மூலம் குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.


Next Story