சிவப்பு சுழல் விளக்குகளை போலீஸ், ராணுவம் பயன்படுத்த அனுமதி மத்திய அரசு விளக்கம்


சிவப்பு சுழல் விளக்குகளை போலீஸ், ராணுவம் பயன்படுத்த அனுமதி மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 7 May 2017 10:15 PM GMT (Updated: 7 May 2017 8:34 PM GMT)

பிரதமர் மோடி கடந்த மாதம் மிக முக்கிய பிரமுகர்களின் (வி.ஐ.பி.) கார்களில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தார்.

புதுடெல்லி,

வி.ஐ.பி. கலாசாரத்துக்கு முடிவு கட்டும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த உத்தரவு மே 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அப்போது, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அவசர நிலை கருதி வழக்கம்போல் சிவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று இது தொடர்பாக ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.

அதில், ‘சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபடும் காவல் துறை மற்றும் ராணுவம், துணை ராணுவம் ஆகிய படைகளும் சிவப்பு சுழல் விளக்குகளை தங்களது வாகனங்களில் பயன்படுத்தலாம். இதேபோல் நில நடுக்கம், வெள்ளம், நிலச்சரிவு, புயல், சுனாமி, அணுசக்தி பேரழிவு மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் பேரிழிவு போன்ற நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களிலும் சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய நிறங்கள் கலந்த சுழல் விளக்குகளை பயன்படுத்தலாம்’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மத்திய மாநில அரசு அலுவலகங்கள் இது தொடர்பான உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story