உ.பியில் பாஜக எம்.எல்.ஏ திட்டியதால் கண்ணீர் விட்டு அழுத பெண் ஐபிஎஸ் அதிகாரி


உ.பியில் பாஜக எம்.எல்.ஏ திட்டியதால் கண்ணீர் விட்டு அழுத பெண் ஐபிஎஸ் அதிகாரி
x
தினத்தந்தி 8 May 2017 6:47 AM GMT (Updated: 8 May 2017 6:46 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ திட்டியதால் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோரக்பூர்,

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியைச்சேர்ந்த கோரக்பூர் தொகுதி எம்.எல்.ஏவான ராதா மோகன் அகர்வால், அங்குள்ள ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை திட்டியதால், பெண் போலீஸ் அதிகாரி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதிக்குட்பட்ட கோயில்வாகிராமத்தில் உள்ள சட்ட விரோதமாக செயல்பட்ட மதுபானக்கடையை அகற்ற கோரி போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தின் போது அங்குள்ள பெண்கள் பெருமளவில் கூடி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீஸ்காரர்கள் ஈடுபட்டனர். இந்த முயற்சியின் போது இரு பொதுமக்கள் மற்றும் போலீசார் இடயே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. இதனல், அங்கு பெரும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. 

இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு எம்.எல்.ஏவும் புகழ்பெற்ற மருத்துவமருமான ராதா மோகன் தாஸ் அகர்வால் வருகை தந்தார். அப்போது, பயிற்சி பெண் ஐபிஎஸ் அதிகாரியான ஷாரு நிகாம்  பணியில் இருந்தார். அவரைப்பார்த்து எம்.எல்.ஏ சரமாரியாக திட்டியுள்ளார். “ நான் உங்களிடம் பேசவில்லை. என்னிடம் எதுவும் பேசவேண்டாம். அமைதியாக இருங்கள். உங்கள் வரம்பை மீற வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரியை விமர்சித்துள்ளார். 

இதனால்,மனம் உடைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி நிகாம், கண்ணீர் விட்டு அழுதார். தனது கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தபடியே நின்றார். இந்த காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியானது. 

இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதிகாரியிடம் நான் தவறாக எதையும் சொல்லவில்லை என்று எம்.எல்.ஏ விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ மதுபானக்கடை இயங்குவதற்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி கட்டாயப்படுத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினார். ஒரு பெண்ணை தாக்கியும் 80 வயது முதிர்ந்த பெண்மணியை இழுத்து அப்புறப்படுத்தியுள்ளார். இத்தகைய செயலை சகித்துக்கொள்ள முடியாது” என்றார்.

Next Story