வெறுப்பூட்டிய நீட் தேர்வு: தேர்வுக்கு முன்னதாக மாணவியின் உள்ளாடையை கழட்டக்கூறிய அவலம்


வெறுப்பூட்டிய நீட் தேர்வு: தேர்வுக்கு முன்னதாக மாணவியின் உள்ளாடையை கழட்டக்கூறிய அவலம்
x
தினத்தந்தி 8 May 2017 8:47 AM GMT (Updated: 2017-05-08T14:16:43+05:30)

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் பொதுத்தேர்வு மாணவிகள் பெரும்பாலானோருக்கு பெரும் வெறுப்பூட்டும் சம்பவமாகவே இருந்தது.


கண்ணூர்,

இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. 

சுப்ரீம் கோர்ட்டும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான பேர் இந்த தேர்வை எழுதினர். தீவிர சோதனைக்கு பின்னரே மாணவ–மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கடுமையான கட்டுப்பாடுகளால் மாணவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். மாணவிகள் பலருக்கு சோதனைகள் பெரும் வெறுப்பூட்டும் சம்பவமாகவே இருந்தது.

 இதற்கிடையே கேரள மாநிலம் கண்ணூரில் தேர்வு எழுதிய மாணவியின் உள்ளாடையை கழட்டக்கூறிய அவலமான சம்பவம் நேரிட்டு உள்ளது. பிற மாணவிகளுக்கும் மோசமான சம்பவங்கள் நடந்து உள்ளது.

பள்ளியில் நீட் தேர்வு எழுத சென்றபோது 18 வயது மாணவியிடம் உள்ளே இருந்த அதிகாரிகள் உள்ளாடையை கழட்ட கூறிஉள்ளனர். 

தேர்வு மையத்தில் வைக்கப்பட்டு இருந்த ‘மெட்டல் டிடெக்டரில்’ சத்தம் எழுந்ததை தொடர்ந்து மாணவியை உள்ளாடையை கழட்ட கூறிஉள்ளனர். மாணவியின் தாயார் பேசுகையில், “என்னுடைய மகள் தேர்வு எழுத மையத்திற்குள் சென்றாள்,  வெளியே வந்தபோது அவளுடைய மேல் உள்ளாடையை என்னிடம் கொடுத்தாள்,” என்று வேதனையுடன் கூறினார். கண்ணூரில் உள்ள ஆங்கில வழி பள்ளியிலே இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. பிற மாணவிகளும் அங்கு மோசமான சம்பவங்களை எதிர்க்கொண்டு உள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளியின் நிர்வாகி ஜலாவுதீன் பேசுகையில், மெட்டல் டிடெக்டரில் சத்தம் கேட்டால் மையத்திற்கு அனுமதிக்க கூடாது என எங்களுக்கு விதிமுறை அளிக்கப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார்.

இதேபோன்று மற்றொரு மாணவியின் ஜீன்ஸ் பேண்ட் பையில் மெட்டல் பட்டன் இருந்து உள்ளது. அதனை அகற்ற நிர்வாகிகள் கேட்டு உள்ளனர். மாணவியின் தந்தை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்து உள்ள பேட்டியில், “என்னுடைய மகள் ஜீன்ஸ் அணிந்து வந்து இருந்தார். அவள் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட் பையில் மெட்டல் பட்டன் இருந்தது. அவர்கள் அதனை அகற்ற கூறினார்கள். நான் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்த துணிகடைக்கு சென்று, கடை திறந்ததும் புதிய ஆடை வாங்கி என்னுடைய மகளுக்கு கொடுத்தேன்,” என கூறிஉள்ளார். இஸ்லாமிய மாணவிகள் தலையில் ஸ்காப் அணிந்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா பேசுகையில், “இதுபோன்ற அவமானங்களை அடுத்து எத்தனை பெண் குழந்தைகள் அவர்களுடைய தேர்வை ஒழுங்காக எழுதமுடியும்? இதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும், முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு நான் கடிதம் எழுதுவேன்,” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிகே ஸ்ரீமதி இது மனித உரிமைகள் மீறல் என சாடிஉள்ளார். இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் தெரிவிப்பேன் என அவர் பேசிஉள்ளார். 


Next Story