காஷ்மீர் நோயாளிடம் தவறாக நடந்துக் கொண்ட சண்டிகார் பிஜிஐஎம்இஆர் மருத்துவர், விசாரணைக்கு உத்தரவு


காஷ்மீர் நோயாளிடம் தவறாக நடந்துக் கொண்ட சண்டிகார் பிஜிஐஎம்இஆர் மருத்துவர், விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 8 May 2017 9:47 AM GMT (Updated: 2017-05-08T15:17:34+05:30)

எங்கள் ராணுவம் மீது கற்களை வீசிவிட்டு, எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறீர்கள் என பிஜிஐஎம்இஆர் மருத்துவர் கூறியது சர்ச்சையாகி உள்ளது.


சண்டிகார்,

காஷ்மீரில் பாகிஸ்தான் உளவு அமைப்பு, ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள், காஷ்மீர் பிரிவினைவாதிகளால் அமைதியின்மை ஏற்பட்டு உள்ளது. அவர்களால் தூண்டிவிடப்படும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவம் கொடுக்கும் பதிலடியில் உள்ளூர் மக்களுக்கும் காயம் அடைகிறார்கள், அப்படி காயம் அடைபவர்களையும் பாதுகாப்பு படையே பெரும்பாலும் மருத்துவமனையில் சேர்க்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகள், டெல்லி, சண்டிகார் மருத்துவமனைகளில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (பிஜிஐஎம்இஆர்) மருத்துவமனையில் காஷ்மீர் நோயாளிடம் மருத்துவர் ஒருவர் தவறாக நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. காஷ்மீரை சேர்ந்த நஸ் ரீனா மாலிக் என்பவருக்கு மூளைவில் இரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உள்ளார். சண்டிகாரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையின் நியூரோசர்ஜரி பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார். அவரை அவருடைய மகன் ஜாவித் அகமது மாலிக் மற்றும் அவருடைய மனைவி சண்டிகார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். 

அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ஒருவர் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக அகமது மாலிக் குற்றம் சாட்டிஉள்ளார். “நீங்கள் எங்களுடைய பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுகிறீர்கள், இங்கு சிகிச்சைக்கு வந்து உள்ளீர்கள்,” என டாக்டர் தகாத முறையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அகமது மாலிக் பேசுகையில், “எங்களிடம் டாக்டர் முதலில் நன்றாகவே பேசினார். என்னுடைய தந்தையின் நலம் குறித்து பேசினார். எப்போது நாங்கள் காஷ்மீரில் சிகிச்சை பெற்றது தொடர்பான அறிக்கையை அவரிடம் காட்டினோமோ, அப்போது கோபம் அடைந்தார். அவற்றை தூக்கி வீசினார்.” என கூறிஉள்ளார்.

 மேலும் டாக்டர் அறுவை சிகிச்சைக்கு சுமார் ரூ.15 லட்சம் ஆகும் என கூறியதாகவும் அமகது மாலிக் கூறிஉள்ளார். அவர் பிறரிடம் விசாரித்த போது மொத்த செலவே ரூ. 80 ஆயிரம்தான் என கூறிஉள்ளனர். இதனையடுத்து மருத்துவர் நீங்கள் வேண்டும் என்றால் டெல்லி ஏம்ய்ஸ் மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறிஉள்ளார். 

இதனையடுத்து அகமது மாலிக் தன்னுடைய தாய், தந்தையரை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு சென்றுவிட்டார். இது தொடர்பாக செய்தியானது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. அவர்கள் டெல்லி செல்ல தயார் ஆகி வருகிறார்கள்.

இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டு உள்ளது.

Next Story