காஷ்மீர் இளைஞர்களை தவறாக சித்தரிக்கும் விவாதங்களை கைவிடுக - முதல்வர் மெஹ்பூபா சையித்


காஷ்மீர் இளைஞர்களை தவறாக சித்தரிக்கும் விவாதங்களை கைவிடுக - முதல்வர் மெஹ்பூபா சையித்
x
தினத்தந்தி 8 May 2017 11:51 AM GMT (Updated: 2017-05-08T17:21:27+05:30)

காஷ்மீர் இளைஞர்களை வெறும் கல்லெறி கும்பல்களாக சித்தரிக்கும் விவாதங்களை ஒளிபரப்புவதை தேசிய ஊடகங்கள் கைவிட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி சையித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீநகர்

இத்தகைய விவாதங்கள் காஷ்மீர் மக்களின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாக மெஹ்பூபா சுட்டிக்காட்டினார். ”காஷ்மீரில் அரசியல் குழப்பம், அமைதியின்மை 1947 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் பொதுவாக்கெடுப்பு கோரி நடந்த போராட்டங்கள் 22 ஆண்டுகளுக்கு நீடித்தது. பின்னர் அமைதி சிறிது காலம் நீடித்தது. மீண்டும் 1990 களில் அமைதி குலைந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள அனைத்து இளைஞர்களும் வன்முறையாளர்கள் கிடையாது. அனைவரும் கல்லெறியும் நபர்கள் கிடையாது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஆன்மா. காஷ்மீரிகளுக்கு அவர்கள் மாநிலம் மட்டுமல்ல, இந்தியாவின் ஓவ்வொரு அங்குலமும் சொந்தம். அவர்கள் அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் மெஹ்பூபா.

போராடும் இளைஞர்கள் கோபத்துடனும், கைவிடப்பட்ட மனத்தாங்கலிலும் உள்ளனர். சிலர் உணர்ச்சிகரமாக தூண்டப்பட்டு காணப்படுகின்றனர். என்றாலும் பல இளைஞர்கள் தேசிய அளவில் பல தேர்வுகளிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் சிறப்பாக செயலாற்றுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் இன்று காணப்படும் கொந்தளிப்பு தீர்வுகாண முடியாதது என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் பல சூழ்நிலைகளை பார்த்து விட்டேன் என்றும் குறிப்பிட்டார் முதல்வர் மெஹ்பூபா.

முன்னதாக கோடைக்கால தலைநகரான ஜம்முவிற்கு மெஹ்பூபா வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தப் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Next Story