கர்ப்பிணி கற்பழிப்பு வழக்கு: “நான் விரும்பியது நீதிமட்டுமே, பழிவாங்குதல் கிடையாது” பில்கிஸ் பானு


கர்ப்பிணி கற்பழிப்பு வழக்கு: “நான் விரும்பியது நீதிமட்டுமே, பழிவாங்குதல் கிடையாது”  பில்கிஸ் பானு
x
தினத்தந்தி 8 May 2017 3:01 PM GMT (Updated: 8 May 2017 3:01 PM GMT)

நான் விரும்பியது நீதிமட்டுமே, பழிவாங்குதல் கிடையாது என பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது ஆமதாபாத் பகுதியை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 10–க்கும் மேற்பட்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு கடந்த 4-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. மும்பை உயர்நீதிமன்றம் கர்ப்பிணி கற்பழிப்பு வழக்கில் 12 பேரின் ஆயுள் தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு அளித்தது. மேலும் 7 பேரை விடுவித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.  

போலீசார், டாக்டர்கள் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையையும் ரத்து செய்ததுடன், அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.

மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 4 நாட்கள் ஆன நிலையில் டெல்லியில் இன்று பில்கிஸ் பானு குடும்பத்துடன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் நான் விரும்பியது நீதிமட்டுமே, பழிவாங்குதல் கிடையாது என்றார். 

பில்கிஸ் பானு பேசுகையில், “மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பானது மிகவும் நல்லது, நான் மகிழ்ச்சி அடைகிறேன், என்னுடைய குடும்பமும் மகிழ்ச்சி அடைகிறது. இந்த வழக்கில் உண்மையை மறைத்த போலீஸ் மற்றும் டாக்டர்கள் தண்டிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  என்னுடைய மூத்த மகள் வழக்கறிஞர் ஆகவேண்டும் என விரும்புகிறாள். என்னுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன், புதிய பாதையில் பயணிப்போம்.” என்றார். அவருடைய கணவர் யாகூப் விசாரணையின் போது குற்றவாளிகள் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார். இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றார். 

பால் வியாபாரியாக உள்ள யாகூப் பேசுகையில், “பசு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் பசு பாதுகாப்பு குழுக்கள் என்னுடைய குடும்ப தொழிலான கால்நடை தொழிலுக்கு பெரும் மிரட்டலாக உள்ளன. வருமானம் வரும் புதிய தொழிலை நான் தேர்வு செய்யவேண்டும்,” என குறிப்பிட்டார். சமூக ஆர்வலர் ப்ராக் நக்வி பேசுகையில் கடந்த 15 ஆண்டுகளாக குற்றவாளிகள் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட மிரட்டல் காரணமாக பில்கிஸ் பானு குடும்பத்தினர் சுமார் 25-க்கும் அதிமான இடங்களுக்கு இருப்பிடத்தை மாற்றி உள்ளனர் என குறிப்பிட்டார்.

நீதிக்கான போராட்டம் நடந்த காலங்களில் அரசு தரப்பில் இருந்து எந்தஒரு ஆதரவையும் நான் பெறவில்லை என்றும் பில்கிஸ் பானு வேதனையுடன் கூறிஉள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில் பில்கிஸ் பானுக்காக ஆஜரான பிரதிநிதி விஜய் ஹிரேமாத் பேசுகையில், பில்கிஸ் பானுவின் வாக்குமூலத்தை முதலில் படித்தபோது என்னால் 5 நாட்கள் தூங்ககூட முடியவில்லை என வேதனையுடன் குறிப்பிட்டார்.

Next Story