பியாஸ்-ரியா பிள்ளை வழக்கு: மற்றொரு அமர்வுக்கு மாற்றம்


பியாஸ்-ரியா பிள்ளை வழக்கு: மற்றொரு அமர்வுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 8 May 2017 3:06 PM GMT (Updated: 2017-05-08T20:35:56+05:30)

சச்சரவுக்குள்ளான தம்பதிகளை பிரச்சினைக்கு தீர்வு காண வற்புறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஷ்ரா, அமிதவா ராய் ஆகியோர் தெரிவித்தனர்.

புதுடெல்லி

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்சும் அவரது காதலியுமான ரியா பிள்ளையும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் ரியா பிள்ளை மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வராததால் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். மும்பை உயர் நீதிமன்றம் காதலர்கள் இருவரும் அமர்ந்து பேசி நிரந்தர தீர்வுக்காண வலியுறுத்தியது. ஆனால் அவர்களால் தீர்வினை எட்ட முடியவில்லை. இந்நிலையில்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அறைக்கு காதலர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் இருவரும் சமாதானமாகவில்லை.

ரியாபிள்ளை முதலில் நடிகர் சஞ்சய் தத்தை மணந்திருந்தார். அவருடன் விவாகரத்து ஆன பின் பியாஸ்சுடன் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்தார். அவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். ரியா பிள்ளை அவரது காதலரான பியாஸ்சும் அவரது தந்தையும் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். 

உச்ச நீதிமன்றம் காதலர்களுக்கு குழந்தை இருப்பதால் நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கை பேசித் தீர்த்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கியிருந்தது. ரியா உச்சநீதிமன்றத்தை ஜீவானாம்சம் கோரி நாடியிருக்கிறார். பியாஸ்சோ தான் அவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்பதால் ஜீவனாம்சம் தருவதற்கில்லை என்று மறுத்து வருகிறார். 

நீதிபதிகளின் அறையில் பேச்சு வார்த்தையின் போது ரியா பிள்ளை தனக்கு ஒரு வீடு வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதற்கு பியாஸ் தரப்பு சம்மதிக்கவில்லை. மேலும் சஞ்சய் தத் மூலம் அவருக்கு ஒரு வீடு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியது. பின்னர் விசாரணையின் போது ரியாவின் வழக்கறிஞர் பியாஸ் பணம் உட்பட எதையும் தர சம்மதிக்கவில்லை என்றார்.

அதன் பின்னர் நீதிபதிகள் தங்கள் அறைக்கு அழைத்து பேசிவிட்டதால் இந்த வழக்கை மற்றொரு அமர்வு தொடர்ந்து விசாரிக்கும் என்றனர். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 18 ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறினர்.


Next Story