விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது


விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது
x
தினத்தந்தி 8 May 2017 11:45 PM GMT (Updated: 2017-05-09T03:36:18+05:30)

விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

தமிழகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக, தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த பொதுநல வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த 3–ந் தேதி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்திட்டங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அறிக்கை தாக்கல்

 இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி தமிழக அரசின் விவசாய நலக்கொள்கை விளக்கக் குறிப்பு, திட்டங்கள், விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான செயல்திட்டங்கள் ஆகியவை குறித்த அறிக்கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகவும், அவை அனைத்தும் விவரமாக இந்த அறிக்கையில் இடம் பெற்று இருப்பதாகவும் கூறினார்.

இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள வக்கீல் (அமிகஸ் கியூரி) கோபால் சங்கரநாராயணன் வாதாடுகையில், பல்வேறு திட்டங்கள் கொள்கை அளவில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றில் பல திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறினார்.

நீதிபதிகள் உத்தரவு

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

 விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் தமிழக அரசு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்பது குறித்து அறிக்கையாக கோர்ட்டுக்கு தாக்கல் செய்யவேண்டும். மாநில வேளாண்மை செயலாளருடன் ஆலோசனை நடத்தி எந்தெந்த திட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும். மேலும் மாநில இலவச சட்ட மையத்துடன் ஆலோசனை மேற்கொண்டு அனைத்து திட்டங்களும் அறிக்கையில் இடம் பெற வேண்டும். தமிழக அரசின் செயல்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து தமிழக அரசின் இணைய தளத்தில் விளக்கமாக இடம் பெற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விவசாயிகளுக்கு நிவாரணம்

நேற்று வழக்கு விசாரணையின் போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜாராமன் குறுக்கிட்டு, தமிழகத்தில் இதுவரை 80 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், ஏற்கனவே விவசாயிகள் பிரச்சினை குறித்து இந்த கோர்ட்டு விரிவாக விசாரித்து வருவதாகவும், எனவே இது குறித்து மனுதாரர் ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.  

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story