நீதிபதி கர்ணனின் அறிக்கைகளை வெளியிட மீடியாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிப்பு


நீதிபதி கர்ணனின் அறிக்கைகளை வெளியிட மீடியாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிப்பு
x

நீதிபதி கர்ணனின் அறிக்கைகளை வெளியிட மீடியாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந் தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ந் தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். மேலும், ஒரு வாரத்துக்குள் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.

  நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நீதிபதி என்பதால் சிறைதண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உடனடியாக கர்ணனை கைது செய்ய வேண்டும் என மாநில போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.

இதற்கிடையே நீதிபதி கர்ணனின் அறிக்கைகளை வெளியிட அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்து உள்ளது.


Next Story