கேரளா - தமிழகம் இடையே ஓடும் பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு ஆறுகளை இணைப்பதற்கு கேரள அரசு எதிர்ப்பு


கேரளா - தமிழகம் இடையே ஓடும் பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு ஆறுகளை இணைப்பதற்கு கேரள அரசு எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 May 2017 4:17 PM GMT (Updated: 2017-05-10T02:43:05+05:30)

இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு ஆறுகளை இணைப்பதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம், 

இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா இடையே ஓடும் ஆறுகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.
கேரள எல்லையில் உள்ள பம்பா, அச்சன்கோவில் ஆறுகளை தமிழக எல்லையில் உள்ள வைப்பாறு ஆற்றுடன் இணைக்கும் செயல்திட்டம் குறித்து தேசிய ஆணையம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதற்கு கேரள மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியது. 

நதி நீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்து உள்ளது.

கேரளாவின் சில கோரிக்கைகளை மதிப்பிட்ட பிறகு, பம்பா, அச்சன்கோவில், வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்ட அறிக்கையை என்.டபுள்யு.டி.எ. தயாரித்தது. அதன் மதிப்பீட்டின்படி, தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் திருப்பிவிடப்படும். இது உபரி நீரில் 20 சதவீதமாகும். ஆனாலும் நதிகள் இணைப்புக்கு கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறது. நதிகள் இணைப்பு இரண்டு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே என்.டபுள்யு.டி.எ. அமைப்பு, முன்னுரிமை அடிப்படையில் டி.பி.ஆர். அறிக்கையை தயாரிக்க சிறப்புக் குழுவை அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற முடியும் என தமிழக அரசு கூறியிருந்தது.  

இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு ஆறுகளை இணைப்பதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் பம்பா-அச்சன்கோவில் ஆறுகள் தமிழகத்தில் உள்ள வைப்பாறு ஆற்றுடன் இணைக்க முடியாது என்ற நிலையை எடுத்து இருக்கிறோம். மாநில அரசின் இந்த நிலையை தேசிய நீர் மேம்பாட்டு ஆணையத்தின் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டத்தில் நமது பிரதிநிதிகள் எடுத்துக்கூறியுள்ளனர். இந்த திட்டம் குறித்து அந்த ஆணையம் ஒரு செயலாக்க ஆய்வு அறிக்கை தான் தயாரித்துள்ளது.

கேரள அரசின் அனுமதி இல்லாமல் ஆறுகளை இணைப்பது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்று தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் கேரள அரசுக்கு உறுதி அளித்துள்ளது. மத்திய அரசு முன்மொழிந்துள்ள, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் சட்டம் 1956-ல் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கேரள அரசு தனது பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகள் என்பதில் ஒரு தெளிவான வரையறை வேண்டும் என்றும் கேரள அரசு கூறியுள்ளது என்றார். 

நதிகளை இணைப்பது தொடர்பான சிறப்பு குழுவிடம் ஏற்கனவே மாநில அரசு எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது எனவும் எதிர்க்கட்சிகளிடம் பினராயி விஜயன் எடுத்துக் கூறினார். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. முல்லைப்பெரியாறு அணையில் அதிகபட்சமாக 152 அடி உயரத்துக்கு நீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறி, கடந்த 1979–ம் ஆண்டு நீர்மட்டத்தை 136 அடியாக கேரளா குறைத்தது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளா அனுமதிக்காததால், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த 2014–ம் ஆண்டு மே மாதம் 7–ந் தேதி உத்தரவிட்டது. அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாக உயர்த்தலாம் என்றும், பின்னர் படிப்படியாக 152 அடியாக உயர்த்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அப்போது கூறியது. அத்துடன், அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிராக கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீர்ப்பாசனம் மற்றும் அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. என்றாலும், முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளா முயற்சி செய்து வருகிறது. கடந்த வாரம் தமிழக அரசு, முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை செய்யவிடாமல் கேரளா தடுப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story