ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்வது எப்படி? ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. செய்து காண்பித்தார்


ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்வது எப்படி? ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. செய்து காண்பித்தார்
x
தினத்தந்தி 9 May 2017 10:15 PM GMT (Updated: 2017-05-10T02:35:40+05:30)

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்வது எப்படி என்பதை டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. செய்து காண்பித்தார்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது. அதையடுத்து, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாகவும், எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கே ஓட்டு பதிவாகுமாறு செய்யப்பட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

ஆனால், தேர்தல் கமிஷன் இதை மறுத்தது. ஓட்டுப்பதிவு எந்திரங்களில் எந்த தில்லுமுல்லும் செய்ய முடியாது என்று கூறியது. அப்படி தில்லுமுல்லு செய்து காண்பிக்க வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது.

சட்டசபை சிறப்பு கூட்டம்

இந்நிலையில், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, நேற்று டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டியது. அதில், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர தில்லுமுல்லு விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது.

கிரேட்டர் கைலாஷ் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரவ் பரத்வாஜ், ஓட்டுப்பதிவு எந்திரம் போன்ற ஒரு மாதிரியை சபைக்கு கொண்டு வந்தார். அதில், எப்படி தில்லுமுல்லு செய்வது என்று செய்து காண்பித்தார்.

90 வினாடிகளில் தில்லுமுல்லு

பிறகு அவர் பேசியதாவது:-

அடிப்படையில், நான் ஒரு என்ஜினீயர். இந்த துறையில் நல்ல அனுபவம் பெற்றுள்ளேன். எனவே, எப்படி இதில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று எனக்கு தெரியும். ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ரகசிய குறியீட்டை பொருத்த தெரிந்து கொண்டால், யார் வேண்டுமானாலும் தில்லுமுல்லு செய்ய முடியும். எனக்கு ஒரு ஓட்டுப்பதிவு எந்திரத்தை கொடுத்தால், 90 வினாடிகளில் அதில் தில்லுமுல்லு செய்து காட்டுகிறேன் என்று தேர்தல் கமிஷனுக்கு சவால் விடுகிறேன்.

மத்தியபிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் நடந்த மாதிரி ஓட்டுப்பதிவின்போது, எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கு ஓட்டு விழுந்தது. அந்த எந்திரம், உத்தரபிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது ஆகும். அங்கு அந்த எந்திரத்தில் ரகசிய குறியீடு பொருத்தப்பட்டு இருந்தது. அதுவே, பா.ஜனதாவுக்கு ஓட்டு விழ காரணம்.

இது மிகவும் கடுமையான பிரச்சினை. நாட்டு விடுதலைக்காக மக்கள் உயிர் தியாகம் செய்தனர். ஆனால், இவர்கள் இத்தகைய செயல்களால் அந்த தியாகத்தை சீரழித்து விட்டனர்.

சுதந்திரம் என்பது நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வது ஆகும். ஆனால், இந்த ஓட்டுப்பதிவு எந்திரங்களை வைத்து தேர்தல் நடத்தினால், மக்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும் பா.ஜனதாவே வெற்றி பெறும் என்ற நிலைதான் நிலவுகிறது.

இவ்வாறு சவுரவ் பரத்வாஜ் பேசினார்.

மோசடியே காரணம்

ஆம் ஆத்மியின் மற்றொரு எம்.எல்.ஏ. அல்கா லம்பா பேசியதாவது:-

நாடு முழுவதும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் நடைபெற்ற மோசடிகள் குறித்து எவ்வளவோ செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனாலும், இதில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று ஒரே பல்லவியையே தேர்தல் கமிஷன் பாடி வருகிறது. டெல்லி மாநகராட்சி தேர்தலில், ஒரு வார்டில் ஆம் ஆத்மி வேட்பாளர் 2 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றதற்கு இந்த மோசடியே காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கெஜ்ரிவால் சவால்

இதற்கிடையே, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் கமிஷனுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். தங்கள் கட்சிக்கு ஒரு ஓட்டுப்பதிவு எந்திரத்தை அளித்தால், அதில் 90 வினாடிகளில் தில்லுமுல்லு செய்து காட்டத்தயார் என்று அவர் கூறியுள்ளார்.

அதே சமயத்தில், இந்த தில்லுமுல்லுவை சட்டசபையில் செய்யாமல், பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பிக்க தயாரா என்று ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா சவால் விடுத்துள்ளார். 

Next Story