கெஜ்ரிவால் மீது 3 ஊழல் புகார் ஆராயப்படும் என சி.பி.ஐ. அறிவிப்பு


கெஜ்ரிவால் மீது 3 ஊழல் புகார் ஆராயப்படும் என சி.பி.ஐ. அறிவிப்பு
x
தினத்தந்தி 9 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-10T02:40:17+05:30)

கெஜ்ரிவால் மீது கபில் மிஸ்ரா 3 ஊழல் புகார்கள் அளித்துள்ளார். அந்த புகார்கள் குறித்து ஆராயப்படும் என சி.பி.ஐ. கூறி உள்ளது.

புதுடெல்லி,

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பணியாற்றி அரசியலுக்கு வந்து டெல்லி முதல்-மந்திரி பதவியை கைப்பற்றியவர் அரவிந்த் கெஜ்ரிவால். இப்போது அவருக்கு எதிராக, அவரது மந்திரிசபையில் இடம் பெற்று சமீபத்தில் நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடியை தனது வீட்டில் வைத்து லஞ்சமாக பெற்றார்” என்பது கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.

ஆனால் கெஜ்ரிவால் மீது கபில் மிஸ்ரா ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார்.

சி.பி.ஐ. யிடம் புகார்

இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு எதிராக சி.பி.ஐ.யிடமும் கபில் மிஸ்ரா நேற்று 3 புகார்களை அளித்துள்ளார்.

கபில் மிஸ்ரா அளித்துள்ள புகார்கள் குறித்து சி.பி.ஐ. கருத்து தெரிவித்தது. இந்த புகார்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என சி.பி.ஐ. கூறியது.

இது தொடர்பாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர்.கே.கவுர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டெல்லி தேசிய தலைநகர் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் மீது முன்னாள் நீர்வளம், சுற்றுலாத்துறை மந்திரி கபில் மிஸ்ரா 3 புகார்களை அளித்துள்ளார். அவற்றை சி.பி.ஐ. ஆராயும்” என கூறப்பட்டுள்ளது.

கடிதம்

கபில் மிஸ்ரா, சி.பி.ஐ.யிடம் புகார்களை அளிப்பதற்கு முன்னதாக கெஜ்ரிவாலுக்கு தனது ‘பேஸ்புக்’ பக்கம் மூலம் ஒரு கடிதம் வெளியிட்டார்.

அதில் அவர், “உங்களுக்கு (கெஜ்ரிவாலுக்கு) எதிராக என் வாழ்வில் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கப்போகிறேன். இதையெல்லாம் நான் உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். நான் வெற்றி பெற உங்கள் ஆசி வேண்டி நிற்கிறேன்” என்று கூறி உள்ளார்.

மேலும் ,“எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, டெல்லியின் எந்தவொரு தொகுதியில் இருந்தும் என்னை எதிர்த்து நீங்கள் போட்டியிட தயாரா?” என அவர் பகிரங்க சவாலும் விடுத்துள்ளார்.

‘தர்ணாவில் ஈடுபடுவேன்’

இது தொடர்பாக அவர் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து கெஜ்ரிவால் ரூ.2 கோடி பெற்றதை தான் பார்த்தது பற்றி ஒரு புகார் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

சட்டவிரோத நில பேரங்களில் கெஜ்ரிவால் உறவினர்கள் எப்படி பலன் அடைந்தனர் என்பது பற்றி ஒரு புகாரும், சட்டவிரோத பணத்தை பயன்படுத்தி சத்யேந்தர் ஜெயின், ஆசிஷ் கேட்டன், சஞ்சய் சிங் உள்ளிட்டவர்கள் பலன் அடைந்தது பற்றி மற்றொரு புகாரும் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப்பயணங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கமாக வெளியிடாவிட்டால், நாளை காலை (இன்று காலை) தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் அவர் எச்சரித்தார்.

சட்டசபையில் எதிரொலிப்பு

இதற்கிடையே இந்த ஊழல் விவகாரம், டெல்லி சட்டசபையில் எதிரொலித்தது. இந்த பிரச்சினையை எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா (பா.ஜனதா) எழுப்ப முயற்சித்தார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து அவர் பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டார். “இந்த நோக்கத்துக்காக சபையின் சிறப்பு அமர்வு நடைபெறவில்லை” என்று கூறி சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் அனுமதி மறுத்தார்.

ஆனால் அவர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது, அவரை சட்டசபையில் இருந்து நாள் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சபைக்காவலர்கள் மூலம் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Next Story