நெடுஞ்சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார்கள் அமைக்க உடனடி விலக்கு கிடையாது


நெடுஞ்சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார்கள் அமைக்க உடனடி விலக்கு கிடையாது
x
தினத்தந்தி 9 May 2017 11:30 PM GMT (Updated: 2017-05-10T03:08:29+05:30)

நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக் கடைகளை அகற்றுமாறு பிறப்பித்த உத்தரவில் கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு உடனடியாக விலக்கு ஏதும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

புதுடெல்லி,

நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும் 2017 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

அத்தகைய கடைகளுக்கு 2017 மார்ச் 31-ந் தேதிக்குப் பிறகு உரிமத்தை புதுப்பிக்கக்கூடாது என்றும், மதுக்கடைகளை அடையாளம் காட்டும் நெடுஞ்சாலையோர வழிகாட்டி பலகைகள் வைக்க தடை விதித்தும் உத்தரவிட்டது.

திருத்தம் கோரும் மனு

இந்த உத்தரவில் திருத்தம் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாசல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த கிளப்புகள், நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு நடந்தது.

அப்போது, நட்சத்திர ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் சங்கத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் கூறப்பட்டதாவது:-

பாதிப்பு ஏற்படாது

கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்கள் ஆகியவற்றில் நிரந்தர உறுப்பினர்கள் மட்டுமே மது அருந்துவதற்கு வருகின்றனர். இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. அது மட்டுமின்றி, யாராவது அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து ஏற்பாடு செய்து அவர்கள் வீடுகளில் அல்லது தங்குமிடங்களில் விடப்படுவார்கள். இதனால் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது.

எனவே, கிளப்புகளுக்கும் நட்சத்திர ஓட்டல்களுக்கும் இந்த 500 மீட்டர் தூரம் என்ற நிபந்தனைக்கு விலக்கு அளிக்கவேண்டும். சென்னையில் ஏறத்தாழ 14 கிளப்புகள் நெடுஞ்சாலையில் உள்ளன. பிற மாநிலங்களிலும் இதேபோல நெடுஞ்சாலைகளில் பல கிளப்புகள் அமைந்துள்ளன. இதனை கருத்தில்கொண்டு கிளப்புகளுக்கும், நட்சத்திர ஓட்டல்களுக்கும் விலக்கு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த வாதத்தில் கூறப்பட்டது.

உடனடி விலக்கு கிடையாது

அதற்கு நீதிபதிகள், “அனைத்து இடங்களிலும் கிளப்புகளும், நட்சத்திர ஓட்டல்களும் பெரும் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளன. எனவே நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் தங்கள் பார்களை அமைத்துக் கொள்வது ஒன்றும் கடினமான காரியமாக இருக்காது. இந்த கோரிக்கையின் மீது உடனடியாக எந்த விலக்கும் வழங்கப்பட மாட்டாது. வழக்கு ஜூலை 2-ம் வாரத்தில் விசாரிக்கப்படும்” என்று உத்தரவிட்டனர். 

Next Story