ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த இளம் ராணுவ அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த இளம் ராணுவ அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 10 May 2017 8:25 AM GMT (Updated: 10 May 2017 9:15 AM GMT)

ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த இளம் ராணுவ அதிகாரியை பயங்கரவாதிகள் கடத்திச்சென்று சுட்டுக்கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் இளம் ராணுவ அதிகாரியான உமர் பயஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஷோபியான் பகுதியில் உள்ள தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உமர் பயஸ்  நேற்று விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, உறவினர் இல்லத்தில் வைத்து உமர் பயஸை 6 முதல் 7 பேர் கொண்ட பயங்கரவாதிகள் கடத்திச்சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். 

சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் உடல்  தலை மற்றும் வயிற்றுப்பகுதியில்  துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இன்று மீட்க்கப்பட்டது. ஹார்மயன் பகுதியில் உடல் மீட்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதால் ஆயுதம் எதுவும் இன்றி உமர் பயஸ் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோக சம்பவத்தில் துணிச்சலான ராணுவ வீரரை வணங்குவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு துணையாக நிற்போம் எனவும்  ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவ அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை தண்டிக்க முழு உறுதியுடன் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது.

இளம் ராணுவ அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராணுவ வீரரை கடத்தி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் செயல் கோழைத்தனமானது ஆகும். ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த இளம் அதிகாரி சிறந்த முன் மாதிரியாக திகழ்ந்தார். மிகச்சிறந்த விளையாட்டு வீரரான உமர் பயஸின் தியாகம், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளை அழிக்க வேண்டியதன் பொறுப்பை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


Next Story