தேசிய செய்திகள்

ஓட்டுப்பதிவு எந்திர முறைகேடு சவாலை சந்திக்க தேர்தல் கமி‌ஷன் இன்று முதல் தயார் ஆகிறது + "||" + The Election Commission is preparing to meet the challenge of tipping machine malpractice today

ஓட்டுப்பதிவு எந்திர முறைகேடு சவாலை சந்திக்க தேர்தல் கமி‌ஷன் இன்று முதல் தயார் ஆகிறது

ஓட்டுப்பதிவு எந்திர முறைகேடு சவாலை சந்திக்க தேர்தல் கமி‌ஷன் இன்று முதல் தயார் ஆகிறது
ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடத்திக் காட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் அழைப்பு விடுத்து உள்ளது.

புதுடெல்லி,

ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடத்திக் காட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் அழைப்பு விடுத்து உள்ளது. கட்சிகள் பரிசோதனை செய்வதற்கான பட்டியலை தேர்தல் கமி‌ஷன் இன்று (சனிக்கிழமை) வெளியிடுகிறது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

அண்மையில் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. ஆனால் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜனதாவை வெற்றிபெற வைத்து விட்டதாக படுதோல்வி கண்ட பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.

மேலும் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை முன்புபோல வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

தேர்தல் கமி‌ஷன் ஆலோசனை

இந்த நிலையில் கடந்த 12–ந்தேதி டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை கூட்டியது. அதில் 42 கட்சிகள் பங்கேற்றன.

இந்த கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் ஓட்டுப்பதிவு எந்திரம் மூலம் தேர்தலை நடத்த ஆதரவு தெரிவித்தன. அதேநேரம் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தி காட்டும் ஒப்புகை சீட்டு எந்திரங்களையும் வைக்கவேண்டும் எனவும் வற்புறுத்தின.

அப்போது, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் எவ்வித தில்லு முல்லும் செய்ய முடியாது என்று தேர்தல் கமி‌ஷன் திட்டவட்டமாக மறுத்தது.

கட்சிகளுக்கு அழைப்பு

என்ற போதிலும், மீண்டும் மீண்டும் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று பல கட்சிகள் கூறி வருகின்றன. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்து உள்ளது.

அதன்படி இன்று(சனிக்கிழமை) தேசிய, மாநில அரசியல் கட்சிகள் மற்றும் செய்தியாளர்கள் முன்பாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் முழுமையாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. அப்போது அரசியல் கட்சிகள், செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை பரிசோதனை செய்துகொள்ள தேர்தல் கமி‌ஷன் அனுமதியும் அளிக்க இருக்கிறது. அதன்படி அரசியல் கட்சிகள் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டலாம். அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த செயல்விளக்கம் தொலைக்காட்சியில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதில் கலந்துகொள்ளும் கட்சிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் எந்த தேதி, எந்த நேரத்தில் பரிசோதனை நடத்த வாய்ப்பு அளிக்கப்படும் என்பது பற்றிய பட்டியலை இன்று(சனிக்கிழமை) வெளியிடுகிறது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.