மீரா குமார் வாழ்க்கை குறிப்பு தூதரக அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர்


மீரா குமார் வாழ்க்கை குறிப்பு தூதரக அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர்
x
தினத்தந்தி 22 Jun 2017 10:00 PM GMT (Updated: 22 Jun 2017 9:14 PM GMT)

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் 72 வயதான மீரா குமார், தூதரக அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஆவார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் 72 வயதான மீரா குமார், தூதரக அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஆவார்.

ஜெகஜீவன் ராம் மகள்

பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தில் 1945–ம் ஆண்டு மார்ச் 31–ந்தேதி மீரா குமார் பிறந்தார். அவர், மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் மகள் ஆவார்.

அவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும், எல்.எல்.பி. என்ற சட்டப்படிப்பும் படித்தார்.

1973–ம் ஆண்டு, இந்திய வெளியுறவு பணி (ஐ.எப்.எஸ்.) அதிகாரி ஆனார். ஸ்பெயின், இங்கிலாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

1980–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேசனில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.

மத்திய மந்திரி

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மீரா குமாரை இந்திய வெளியுறவு அதிகாரி வேலையை விட்டு விட்டு, காங்கிரசில் இணையச் செய்தார். அதன்படி இணைந்த மீரா குமார், 1985–ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி. ஆனார். அந்த தேர்தலில், இதர தலித் தலைவர்களான மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை தோற்கடித்தார்.

பின்னர், 4 தடவை எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004–ம் ஆண்டு, மத்திய மந்திரி ஆனார். 2009–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டுவரை பாராளுமன்ற சபாநாயகராக பணியாற்றினார்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ஆகிய கட்சி பதவிகளை வகித்துள்ளார். 2000–ம் ஆண்டு முதல் 2002–ம் ஆண்டுவரை, காங்கிரசை விட்டு விலகி இருந்தார்.

குடும்பம்

மீரா குமாரின் கணவர் மஞ்ஜுல் குமார், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

கர்நாடக சங்கீதத்திலும், புத்தகம் வாசிப்பதிலும் மீரா குமார் ஆர்வம் கொண்டவர்.


Next Story