ரூ.3 லட்சத்துக்கு தமிழக தம்பதியிடம் பச்சிளம் குழந்தையை விற்ற கேரள பெண் கைது


ரூ.3 லட்சத்துக்கு தமிழக தம்பதியிடம் பச்சிளம் குழந்தையை விற்ற கேரள பெண் கைது
x
தினத்தந்தி 23 Jun 2017 10:34 PM GMT (Updated: 2017-06-24T04:04:19+05:30)

பச்சிளம் குழந்தையை விற்ற கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள காட்டக்கடா நகரை சேர்ந்த பெண் கைது.

திருவனந்தபுரம், 

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள காட்டக்கடா நகரை சேர்ந்தவர் 27 வயது இளம் பெண். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி அன்று அந்த பெண் மருத்துவமனையில் மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஏற்கனவே 2 குழந்தைகளுடன் வறுமையில் தவித்து வருவதால் 3-வதாக பிறந்த பெண் குழந்தையை விற்பதற்கு முடிவு செய்தார்.

இதையடுத்து இடைத்தரகர் ஒருவர் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியிடம் ரூ.3 லட்சத்துக்கு பச்சிளம் பெண் குழந்தையை விற்றார். பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இளம் பெண், பக்கத்து வீட்டுகாரர்களிடம் பிரசவத்தின் போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதில் சந்தேகமடைந்த அவர்கள் முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பினர்.

அதன்பேரில் போலீசார் அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, பச்சிளம் குழந்தையை விற்ற சம்பவம் அம்பலத்துக்கு வந்தது. இதையடுத்து போலீசார் இளம் பெண்ணை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் குழந்தையை விற்பதற்கு ஏற்பாடு செய்த இடைத்தரகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். இதற்கிடையே இளம் பெண்ணுடன் இருந்த மற்ற 2 குழந்தைகளையும் மாநில குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் மீட்டு சென்றனர். 

Next Story