திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ‘ஆதார்’ கட்டாயம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ‘ஆதார்’ கட்டாயம்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:00 PM GMT (Updated: 2017-06-25T02:17:03+05:30)

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ‘ஆதார்’ கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கூறியதாவது:-

‘ஆதார்’ கட்டாயம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் வாடகை அறை, 300 ரூபாய் கட்டண விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு, ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றுக்கு புகைப்படம் ஒட்டப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து வருகின்றனர். தரிசன டிக்கெட் முன்பதிவு, வாடகை அறை முன்பதிவு செய்யும் பக்தர்களில் 90 சதவீதம் பேர் தங்களின் ‘ஆதார்’ அட்டையை பயன்படுத்தி வருகின்றனர்.

சிலர் ஆதார் அட்டை வைத்திருந்தாலும், தங்களிடம் உள்ள வேறு சில அடையாள அட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இனி வரும் காலத்தில் திருமலைக்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

பாஸ்போர்ட் எண்

மேலும் தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட், வாடகை அறை முன்பதிவு, 300 ரூபாய் கட்டண விரைவு தரிசன டிக்கெட், ஸ்ரீவாரிசேவா விண்ணப்பம், உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவு விண்ணப்பம் ஆகியவற்றுக்கு தேவஸ்தானம் வழங்கி வரும் அனைத்துச் சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும்.

ஆதார் எண்ணை அளித்தால் மட்டுமே அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இது, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பக்தர்களுக்கும் பொருந்தும். வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் முன்பதிவு செய்யும்போது ஆதார் அட்டைக்கு பதிலாக தங்களின், ‘பாஸ்போர்ட்’ எண்ணை காண்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Next Story