காஷ்மீரிகள் மீது படையெடுப்பவர்களை இஸ்லாமியர்கள் கண்டிக்க வேண்டும் அயத்துல்லா காமெனி


காஷ்மீரிகள் மீது படையெடுப்பவர்களை இஸ்லாமியர்கள் கண்டிக்க வேண்டும் அயத்துல்லா காமெனி
x
தினத்தந்தி 26 Jun 2017 9:45 AM GMT (Updated: 2017-06-26T15:15:27+05:30)

காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது படையெடுக்கும் அடக்கு முறையாளர்களை இஸ்லாமியர்கள் கண்டிக்க வேண்டும் என ஈரானிய தலைவர் காமெனி கூறிஉள்ளார்.


புதுடெல்லி,

சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவாக அயத்துல்லா காமெனி பேசுவது இதுஒன்றும் புதியது கிடையாது, ஏற்கனவே இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அஹ்லுல்பாய்த் செய்தி நிறுவன தகவலின்படி பெருநாள் தொழுகைக்கு செல்லும் நிலையில் காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது படையெடுக்கும் அடக்கு முறையாளர்களை இஸ்லாமியர்கள் கண்டிக்க வேண்டும் என கூறிஉள்ளார் அயத்துல்லா காமெனி. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் அமைதியின்மை நீடித்து வருகிறது. 

பிரிவினைவாதிகள் பாதுகாப்பாகவும், போலீசார் பாதிக்கப்படும் ஒரு பதற்றமான நிலையானது காஷ்மீர் பகுதியில் நீடித்து வருகிறது. 

பாகிஸ்தான் உதவிபெறும் பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் இலக்காக்கப்படும் நிலையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. பாரத பிரதமர் மோடி அமெரிக்க பயணம் சென்று உள்ளார். இருநாட்டு உறவும் வலுவடைந்து உள்ளது. இஸ்லாமியர்கள் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஈரான் எதிர்த்து வருகிறது. இந்நிலையில் அயத்துல்லா காமெனி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்லாமிய சமுதாயம் பக்ரைன், காஷ்மீர், ஏமன் உள்ளிட்டவற்றிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும், 

ரமலானின் போது மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அடக்குமுறையாளர்கள் மற்றும் சர்வாதிகாரிகளை நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். 

இரண்டாவது டுவிட்டில் பக்ரைன், ஏமனை சுற்றியுள்ள பிரச்சனைகள் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தை முழுவதுமாக காயப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டு உள்ளார் அயத்துல்லா காமெனி. கடந்த 2001-ம் ஆண்டு காமெனி பேசுகையில், “காஷ்மீர் பிராந்தியத்தில் வாழும் மக்களுக்கு அவர்களுடைய உரிமையை வழங்கும் விதமாக காஷ்மீர் பிரச்சனையானது தீர்க்கப்படும் என நாங்கள் நம்புகிறோம், அவர்களுக்கு ஆறுதல் மற்றும் அமைதியை வழங்கவேண்டும்,” என பேசியிருந்தார். முந்தைய 1990, 1994-ம் ஆண்டுகளிலும் காமெனி இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உள்ளார். 


Next Story