பர்கான் வானி கொல்லப்பட்ட தினத்தையொட்டி 7 நாட்கள் போராட்டம் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்


பர்கான் வானி கொல்லப்பட்ட தினத்தையொட்டி 7 நாட்கள் போராட்டம் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2017 3:20 PM GMT (Updated: 26 Jun 2017 3:20 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்ட தினத்தையொட்டி 7 நாட்கள் போராட்டம் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர்.


ஸ்ரீநகர், 


ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி, கடந்த வருடம் ஜூலை 8-ம் தேதி காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டான். இதையடுத்து நடந்த வன்முறை சம்பவங்களால் 80–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் சப்ஜார் பாத்தை தலைவராக நியமனம் செய்தது. சப்ஜார் பாத்தும் கடந்த மாதம் கொல்லப்பட்டார். இது ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்திற்கு பெரும் இழப்பாகும். காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது.

பாகிஸ்தான் உதவி பெரும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் தூண்டுதல் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டு உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக இலக்காக்கப்பட்டு வருகின்றனர். போலீசும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறது. 

இதற்கிடையே ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி கொல்லப்பட்ட தினத்தையொட்டி 7 நாட்கள் போராட்டம் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். பல்வேறு பயங்கரவாத குழுக்கள் அடங்கிய ஒருங்கிணைந்த ஜிகாத் குழுவானது (யுஜெசி) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது. பிரிவினைவாதிகள் காஷ்மீரில் போராட்டம் நடத்துவது போல் யுஜெசியும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது மேலும் பதற்றத்தை அதிகரிக்க செய்து உள்ளது. ஒருங்கிணைந்த ஜிகாத் குழு தலைவன் செயத் சலாவுதீன், அழைப்பு விடுக்கும் வீடியோவானது வெளியாகி உள்ளது.

முதல்முறையாக வெளியாகி உள்ள இதுபோன்ற வீடியோவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்டமானது 1931-ம் ஆண்டு ஜூலை 13-ம் ஆண்டு போராட்டத்தின் போது உயிரிழந்த காஷ்மீரிகளையும் நியாபகப்படுத்தும் என கூறிஉள்ளான் சலாவுதீன். பாகிஸ்தானிலும் சிறப்பு கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒருங்கிணைந்த ஜிகாத் குழு கூறிஉள்ளது.

இதற்கிடையே பர்கான் வானி கொல்லப்பட்ட தினத்தையொட்டி பயங்கரவாதிகள் போராட்டம் நடத்துவதை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்பு படைகள் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. முக்கியமான பகுதிகள் உள்பட தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.


Next Story