பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்


பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 26 Jun 2017 11:15 PM GMT (Updated: 26 Jun 2017 7:58 PM GMT)

வெளிநாட்டு பயணங்களின் போது எதிர்க்கட்சிகளை குறை கூறுவதாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

வெளிநாட்டு பயணங்களின் போது எதிர்க்கட்சிகளை குறை கூறுவதாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போது, முந்தைய ஆட்சியில் ஊழல் மலிந்து இருந்ததாகவும், தற்போதைய பா.ஜனதா அரசில் ஊழல் கறை எதுவும் இல்லை என்றும் கூறினார். இவ்வாறு வெளிநாட்டு மண்ணில் எதிர்க்கட்சிகளை தொடர்ந்து குறைகூறி வருவதாக பிரதமர் மீது காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

பிரதமர் நரேந்திர மோடி தனது 64–வது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சிகளை குறை கூறுவதையே அவர் தனது வெளிநாட்டு கொள்கையாக வைத்திருப்பதுடன், பிரச்சினைகளை திசை திருப்புவதையே தனது வியூகமாக கொண்டுள்ளார்.

காங்கிரசின் நல்ல திட்டங்களை கடன் வாங்குவதே அவரின் அரசியலாக மாறிவிட்டது. வெளிநாட்டு மண்ணில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து மலிவான விளம்பரம் தேடுவதே பிரதமரின் மரபணுவாக மாறிவிட்டது.

இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.


Next Story