ஆழ்துளைக்கிணற்றில் சிக்கி 5 வயது சிறுவன் மரணம் மகாராஷ்டிராவில் நடந்த பரிதாபம்


ஆழ்துளைக்கிணற்றில் சிக்கி 5 வயது சிறுவன் மரணம் மகாராஷ்டிராவில் நடந்த பரிதாபம்
x
தினத்தந்தி 27 Jun 2017 11:53 AM GMT (Updated: 27 Jun 2017 11:54 AM GMT)

மகாராஷ்டிர மாநிலத்தின் சடரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5 வயது சிறுவன் 300 அடி கிணற்றில் தவறி விழுந்து பலி.


புனே,

மகாராஷ்டிர மாநிலத்தின் சடரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5 வயது சிறுவன் 300 அடி கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளான்.

சிறுவனின் பெற்றொர்கள் இருவரும் விவசாயிகள். நேற்று மதியம்  கிராமத்திலுள்ள வயலில் குழந்தையின் பெற்றோர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.  அப்போது வயலுக்கு அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்து இருக்கிறான். இக்கிராமம் மாவட்ட தலைநகர் மும்பையில் இருந்து 85 கிமீ தூரத்தில் உள்ளது.

மீட்புப் படையினர் தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.மேலும் மருத்துவ குழு ,போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பல்வேறு முயற்சிக்கு பின் சிறுவன் இன்று அதிகாலை மீட்கப்பட்டான்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இது பற்றி அதிகாரிகள் ,” நாங்கள் பார்க்கும் போது குழியில் 20 அடிக்கு மண்ணால் நிரப்பட்டிருந்தது. ஊர் மக்கள் சிறுவனை காப்பாற்ற முயன்ற போது இது நடந்திருக்கலாம்” என தெரிவிக்கின்றனர்.

இது போன்ற சம்பவம் தொடர்ச்சியாக நாடு முழுவதும் நிகழ்கிறது.

 தெலுங்கானாவில் 14 மாத பெண்குழந்தை இரண்டு நாட்களுக்கு முன் தவறி விழுந்து இறந்தது. அதே போல் ஏப்ரல் மாதம் கர்நாடகாவில் 6 வயது குழந்தை 400 அடி கிணற்றில் விழுந்து இறந்தது.

கடந்த வருடம் புனேவிலிருந்து 63 கிமீ தொலைவில் உள்ள சிரூர் கிராமத்தில் 4 வயது சிறுவன் 200 அடி கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அக்குழந்தையும்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story