ஜனாதிபதி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிகிறது


ஜனாதிபதி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிகிறது
x
தினத்தந்தி 27 Jun 2017 3:24 PM GMT (Updated: 27 Jun 2017 3:24 PM GMT)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி நாளையுடன் முடிகிறது. மீரா குமார் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.


புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம்  ஜூலை 24 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதன்காரணமாக நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யவதற்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் மீரா குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

தற்போது வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவு பெறுகிறது. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  

தற்போது வரை 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும் 57 க்கும் குறைவான நபர்களே வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். ஒரு நபர் அதிகபட்சமாக 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 

தற்போதுவரை வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளவர்களில் பாஜக வேட்பாளரைத்தவிர அனைவரது வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. ஏனெனில், 50 பேர் முன்மொழிய வேண்டும் என்பதால் ஏனைய  வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்பட உள்ளது.  ஜனாதிபதி தேர்தலில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள 64 வேட்பு மனுக்களில் தமிழகத்தைச்சேர்ந்த தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் கே பத்மராஜன் என்பவரும் அடங்குவார். சேலத்தைசேர்ந்த இவர் 150 க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 

வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஜூலை 1–ந் தேதியாகும். அதன்பிறகு தேர்தலில் யார்–யார்? போட்டிடுகிறார்கள் என்பது தெரிவதோடு, வாக்குப்பதிவு நடக்குமா? என்பதும் உறுதி செய்யப்படும்.

Next Story