சரக்கு, சேவை வரி நடைமுறைக்கு வருவதால், பண வீக்கம் அதிகரிக்காது


சரக்கு, சேவை வரி நடைமுறைக்கு வருவதால், பண வீக்கம் அதிகரிக்காது
x
தினத்தந்தி 28 Jun 2017 12:00 AM GMT (Updated: 2017-06-28T03:00:42+05:30)

1–ந்தேதி முதல் சரக்கு, சேவை வரிவிதிப்பு நடைமுறைக்கு வருவதால் பண வீக்கம் அதிகரிக்காது என்று அருண் ஜெட்லி கூறினார்.

புதுடெல்லி,

1–ந்தேதி முதல் சரக்கு, சேவை வரிவிதிப்பு நடைமுறைக்கு வருவதால் பண வீக்கம் அதிகரிக்காது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறினார்.

நாடு முழுவதும் ஒரே விதமான மறைமுறை வரியாக சரக்கு, சேவை வரி விதிப்பு முறை வரும் 1–ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியில் செய்தி சேனல் ஒன்றின் சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இதுவரை நடைமுறையில் இருந்து வருகிற வரி விதிப்பைவிட சரக்கு, சேவை வரி குறைவானதுதான். எனவே இது மக்களுக்கு பலன் தரும். பணவீக்கம் அதிகரிக்காது.

இந்த வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்துவிட்டால், யாரும் வரி செலுத்தாமல் ஏய்க்க முடியாது.

இது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு பலன் தருகிற வரி விதிப்பு முறையாகும்.

ஆண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையில், வருமானம் பார்க்கிற வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், உணவு விடுதிகள் கலவை திட்டத்தின்கீழ், முறையே 1 சதவீதம், 2 சதவீதம், 5 சதவீதம் வரி செலுத்தலாம்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் 2004–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரையில், பெரிதான வகையில் எந்த ஒரு சீர்திருத்தமும் செய்யப்படவில்லை.

சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை, 30–ந்தேதி நள்ளிரவு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிற விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், விழாவுக்கு அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவுக்கு வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தகவல் எதுவும் தெரிவிக்காதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அருண் ஜெட்லி, ‘‘அவர்கள் என்ன செய்வார்கள் என்பது எனக்கு தெரியாது. சரக்கு, சேவை வரி தொடர்பான அனைத்து முடிவுகளும் கூட்டாக எடுக்கப்பட்டன. இந்த விழா, நமது அரசியல் கூட்டுத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என கூறினார்.

மேலும், ‘‘இது ஒட்டுமொத்த நாட்டுக்கானது. இந்த விழாவில் ஜனாதிபதி பங்கேற்பார். எனவே இதில் அரசியல் கூடாது’’ என்றும் கூறினார்.


Next Story